வான் தேவதை
ஏன் அழுகிறாள்!
யாராவது கேட்டீர்களா.....?
நான் கேட்டேன்.
அவள் சொல்கிறாள்......
வனங்களை அழித்தார்;
வயல்வெளிப் படைத்தார்!
மரங்களை அழித்தார்;
மனைஅடி எடுத்தார்!
மலைகளை அழித்தார் ;
விலைக்கும் விற்றார்!
மணலைச் சுரண்டி
பணமாய் கொழித்தார்!
நீர்வழி தடத்தை
பேர்வழி பதிந்தார்!
ஆற்றைக் காணோம்?
ஊற்றைக் காணோம்?
கிணற்றை காணோம்?
குளத்தை காணோம் ?
புழுவை காணோம் ?
பூச்சியை காணோம்?
குடிக்க வருகிற
பறவைக் காணோம்?
கடிக்க வருகிற
விலங்கை காணோம்?
செயற்கைக் கொண்டு
இயற்கை அழித்தார்.....
உழவை மறந்தார்!
உணவை மறந்தாரா?
உலகை மறந்தார்!
உண்ண மறந்தாரா?
தாயின் வயிற்றை
பேயாய் கிழித்து
மனிதனை மனிதன்
உண்ணும் நிலையா?
உயிருக்கும் வைப்பார்
ஒரு விற்பனை விலையை!
மனிதன் மட்டுமே
மண்ணில் நிலையா?
மரணத்தை நோக்கிய
மனிதனை கண்டு அழுகிறேன்!
வெப்பம் தாங்காமல்
வெடிக்கும் பூமியை கண்டு அழுகிறேன்!
உருகிக் கடல் பெருகும்
பனிக்கட்டி கண்டு அழுகிறேன்!
வலுவிழந்த
வான்கல் கண்டு அழுகிறேன்!
பொங்கித் புயலான
தென்றல் கண்டு அழுகிறேன்!
சுவாசிக்க காற்றில்லா
காலத்தை கண்டு அழுகிறேன்....
வத்தலாபுரம் முருகேசன்