இருப்பதிலேயே சிரித்த முகமான
மானசீக முகமூடியை
அணிந்து கொண்டு
புறப்பட்டான்
திங்கள்கிழமை காலை
இருபத்தி நாலு மணி நேரத்தில்
செய்ய முடியாத வேலைகளை
இரண்டு மணி நேரத்தில்
செய்து முடிக்கச் சொன்ன
மேலாளரை பார்த்து
முகமூடி சிரித்தது
வம்படியாய் பல
சந்தேகங்களையும்
குதர்க்க விவாதங்களையும்
வைத்து நேரத்தை கடத்திய
வாடிக்கையாளரின் மனம் நோகாமல்
புன்னகைத்தது முகமூடி
எட்டு மணி வரை பணியாற்றி
அலுப்புடன் வீடு நுழைகையில்
சுற்றுலா போக பணம் கேட்ட
மகனிடம் கடுமையாக பேசியபோது
லேசாக கிழிந்தது முகமூடி
சட்டையை கழற்றிய போது
காபித்தூள் வாங்கிவர
மறந்து விட்டீர்களா என மனைவி
கேட்டபோது தானாகவே
முகமூடி தெறித்துக்கிழிந்து
உண்மை முகம் வெளிப்பட்டது