tamilnadu epaper

ரோஜா

ரோஜா


அமுதாவால் தாங்க முடியவில்லை. இரண்டு வயதுக் குழந்தை ரோஜா பசிபசி என்று அழும்போது செய்வதறியாமல் கண் கலங்கினாள். 

கட்டிய கணவன் நல்லவனாக இருந்திருந்தால் இன்று இந்நிலை வருமா? 


சரவணன் ஒரு சோம்பேறி. வேலை செய்வதையே வெறுப்பவன். மனைவி, குழந்தை பற்றி சிறிதும் கவலைப் படாதவன்.அவன் திருடன் என்பதால் அமுதா எங்காவது வேலை தேடிச் சென்றால்,'நீயும் உன் கணவன் மாதிரி திருடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்?' என்பார்கள். 


ஒரு பணக்காரர் வீட்டில் திருடிய சரவணன் போலீசில் மாட்டிக்கொண்டு சிறைக்குப் போனபின் அவள்பாடு திண்டாட்டமாகியது. வேறு வழியின்றி ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுக்க அமர்ந்தாள். அச்சமயம் அங்கு வந்த சாந்தி ரோஜாவின் அழகில்

மயங்கினாள். 


அமுதாவைத் தன்னுடன் வந்து வீட்டுவேலை செய்யும்படியும், குழந்தையைத் தான் நன்கு வளர்ப்பதாகவும் கூறி அழைத்துச் சென்றாள். அவளுக்கு சற்று சந்தேகமாக இருந்தாலும் எப்படியோ ரோஜாவைப் பசியின்றி வளர்க்கவும், தனக்கு பாதுகாப்பாக ஒருஇடம் கிடைக்கவும் வழிகிடைத்ததை எண்ணி சாந்தியுடன் சென்றாள்.


அவள் குழந்தையிடம் மிக பாசமாக இருந்தாள். அமுதாவிடம் அவளைப் பற்றி விசாரித்தபோது, அவள் சரவணனைப் பற்றி சொன்னாள். அவனது புகைப்படத்தைக் காட்டியபோது, அவன் சிறு வயதில் காணாமல் போன அவளது தம்பி என்று தெரிந்தது. 


அவன் சிறுவயது முதலே கெட்ட பழக்கங்களுடன் வளர்ந்தவன், 15 வயதிற்குப் பின் காணாமல் போய்விட்டான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் குழந்தைதான் ரோஜா என்பது தெரிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். குழந்தையில்லாத தனக்கு கடவுளே இந்தக் குழந்தையை கொடுத்ததாக எண்ணி நன்றி கூறினாள்.



-ராதா பாலு