பால்காரன் சென்ற பின் அவர் மனைவி செல்வி கேட்டாள்." />

tamilnadu epaper

வந்தாண்டா பால்காரன்

வந்தாண்டா பால்காரன்


  தியாகராஜனை பார்த்து பால்காரன், "சௌக்கியமா சார்?" என்று கேட்க முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றார் அவர்.


பால்காரன் சென்ற பின் அவர் மனைவி செல்வி கேட்டாள். "உங்களை மதிச்சு சவுக்கியமா?'ன்னு கேட்டாரே... ஒரு வார்த்தை பதில் சொல்லிட்டு வந்திருக்கலாமல்ல?"


 "கூடாது!...,ஏன்னா?... நான் ஒரு கம்பெனியில் மேனேஜர்!.. அவன்கிட்டே இன்னிக்குப் பேசினா அதையே சாக்கா வெச்சுக்கிட்டு தெனமும் பேசுவான்!... திடீர்னு ஒரு நாள் "என் சொந்தக்காரப் பையன் ஒருத்தனுக்கு வேலைக்கு சிபாரிசு பண்ணுங்க சார்!"ம்பான்!... இல்லேன்னா... கடன் கேட்பான்!... அதனால அவனுகளையெல்லாம் கொஞ்சம் டிஸ்டன்ஸிலேயே வெச்சுக்கணும்!"


அடுத்த வாரத்தில் ஒரு நாள் செல்வியிடம் பால்காரன் கேட்டான். "மகனைக் காலேஜில் சேர்த்தாச்சா?"


 "இன்னுமில்லை!... அவன் பி.ஈ.தான் சேர்வேன் அதுவும் அந்தக் காஸ்ட்லி காலேஜ்லதான் சேருவேன்னு அடம்பிடிக்கறான்!.. சாரும் முடிஞ்ச வரைக்கும் பணம் ஏற்பாடு பண்ணிட்டார்... ஆனாலும் கொஞ்சம் பத்தலை... ஏற்பாடு பண்ணிட்டிருக்கார்"


 அன்று, காலேஜில் சேர பணம் கட்ட இறுதி நாள். கடைசியா ஒரு ரெண்டு லட்சம் புரட்ட முடியாமல் திணறிக் கொண்டிருந்தார் தியாகராஜன்.


காலையில் வந்த பால்காரன், சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சப்பையை எடுத்து வந்து செல்வியிடம் நீட்ட, அவள் கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தாள்.


  "இதுல 2 லட்சம் இருக்குது தாயி!... ஊரிலிருந்து குத்தகைப்பணம் வந்துச்சு... நீங்க மகனுக்கு காலேஜுக்குக் கட்ட பணம் பத்தலைன்னு சொன்னது ஞாபகம் வந்துச்சு... அதான் எடுத்துட்டு வந்தேன்! இந்தாங்க வெச்சுக்கோங்க!"


செல்வி தயங்க,


  "தாயி... ஒரு அப்பாவா உங்க வீட்டுக்காரர் மனசு எவ்வளவு பாடுபடும்ன்னு... எனக்குத் தெரியும்! மகனோட படிப்புக்குக் கூட பணம் கட்ட முடியலையே!ன்னு குமுறும்!... அதனால... மொதல்ல போய் மகனை காலேஜ்ல சேர்த்துட்டு வாங்க மீதியை அப்புறம் பேசிக்கலாம்"


  "இல்லைப்பா என் வீட்டுக்காரர் கிட்ட ஒரு வார்த்தை"


  "அய்யய்ய... நான் தந்ததா சொன்னா வாங்க மாட்டார்.... அதனால வேற யாரோ கிட்ட நீங்க வாங்கினீங்க!ன்னு சொல்லிக் கொடுத்திடுங்க! என்றபடி பால்காரன் நகர்ந்தான்.


  ஜன்னலருகே நின்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த தியாகராஜன் கூனிக் குறுகினார்.


 " ஹும்... இவன் கூட பேசினாலே ஆப்ளிகேஷன் கேட்பான்னு இவனை ஒதுங்கிய நான் எங்கே?... மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியலைன்னு ஒரு அப்பாவா நான் வேதனைப்படக் கூடாதுன்னு பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு போற இவன் எங்கே?"


  வீட்டிற்குள் வந்த செல்வி எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தயங்கி நிற்க, "ம்... வாங்கிக்கலாம்!" என்று தலையாட்டலில் பதில் சொன்னார் தியாகராஜன்.



-முகில் தினகரன்,

கோயமுத்தூர்