“வலி” பல பரிமாணங்களை
கொண்டது
மனித வாழ்க்கையின் மாறாத அடையாளம்
பிறப்பு முதல் இறப்பு வரை!
தாயின் வலியின்
எல்லையில் இருந்து
பிறக்கும் மனிதன்
தனது வலியின் எல்லையில் இறக்கிறான்;
வலி இரண்டு துன்ப முகங்களோடு வாழ்வில் வலம் வருகிறது!
உடல் வலியால்
வரும் துன்பம்;
அது
பலவகையான காரணங்களை அள்ளிவருகின்றது;
நதி நீரானது கற்களையும் மற்றும் பலவையும்
அள்ளிவருவதுப்போல;
நோயோ விபத்தோ அறியாமையோ இன்னும் எதுவோ;
ஆரம்பிக்கும் நேரமும்
தெரிவதில்லை!
முடித்தனுப்பும் வழியும்
புரிவதில்லை;
கொண்டவரின் உடல் வலிமை கூடுதலால் இது குறையகூடும்;
ஒருவர் வலியை இன்னொருவர் அனுபவிக்க முடியாது;
இதுவே இதன் தனித்துவமாகும்
மானுட வாழ்வில்!
வலியை அனுபவிக்கிறவனின் குணாதிசயங்கள்
எப்போதும் வேறுபடுகின்றன!
அதை பொறுத்தே
அவை போற்றவோ தூற்றவோப் படுகின்றன;
ஒரு படைவீரன் மரணிக்கும்போது அடையும் வலி
அது
ஒட்டுமொத்த
தேசத்தின் வலி!
ஒரு முதியவரின் வலி!
அந்த குடும்ப
சந்ததியினரின் வலி!
ஒரு குற்றவாளியின் வலி;
அது
கேட்டு வாங்கிய வலி!
ஒரு அனாதையின் வலி!
அது
சமுதாயத்தின் வலி!
ஒரு அப்பாவியின் வலி
அது
அறியாமை தந்த வலி!
வலியின்
வேறொரு
கோரமுகம் மனவலியே!
உடல்வலிக்கு மருந்தென்றும் மார்க்கமென்றும் உண்டு
தீர்த்துவைக்க!
மனவலிக்கு
மாற்றாக
என்ன உண்டு இங்கு
மனவலிமையே தவிர!
மனவலி மனதுக்குள்ளேயே
அடைப்பட்டு கிடக்கிறது!
மனோதிடமெனும் மகுடிக்கு
கட்டுபட்ட நாகமாய்!
மகுடியின் ஒலி
மங்கும் நேரம் விழித்தெழுந்து வெறித்தனம் செய்யும்;
உடல் வலியைப்
போல்தான் இதுவும்;
ஒராயிரம் காரணங்களை உள்ளடக்கி உருவாகிறது;
நயவஞ்சகமும் துரோகமும் அவநம்பிக்கையும்
தோல்வியுமென
அடுக்கினோமானால்
ஒரு விண்ணுயர
கட்டிடமே உருவாகும்
நயவஞ்சகத்தினால் வரும் வலி
அது
கூடாநட்பின் விலை;
ஏமாற்றத்தினால்
வரும் வலி
அது
அனுபவமின்மையின் விலை;
அவநம்பிக்கையினால் வரும் வலி;
அது
பக்குவமின்மையின் விலை;
காதல் தோல்வி
தரும் வலி;
அது
வாழ்க்கைப்
பாடத்திற்கான விலை
மனவலியோ உடல் வலியோ
எவரும் விரும்பி ஏற்பதல்ல;
மனித வாழ்க்கை என்பது
வலிகளால் தோற்பதும் அல்ல;
-ரேணுகாசுந்தரம்