tamilnadu epaper

வழி நெடுக அழியாத சுவடுகள்

வழி நெடுக அழியாத சுவடுகள்

நூலாசிரியர்: எஸ். அற்புதராஜ்

நூல் விமர்சனம்: தாணப்பன் கதிர்

சந்தியா பதிப்பகம்

73, 53 வது தெரு,

அசோக் நகர்

சென்னை - 83.

பக்கங்கள் 158.

விலைரூ. 200.


    ஐந்து வயதில் பள்ளிக்கூடத்தில் சந்தித்த சிறுவன் கூட என் நினைவில் நின்று கொண்டிருக்கிறான் என்கிற தன்னுரை அவரது நினைவாற்றலை எடுத்து இயம்புகிறது. முதல் தொகுதி முழுவதும் படித்த பள்ளி, கல்லூரி அங்கு இருந்த ஆசிரிய, பேராசிரிய பெருமக்கள் கூடப்படித்த நண்பர்கள் என ஒருவர் கூட மறக்காமல் பதிவு செய்திருப்பது அவரது நினைவாற்றலுக்குச் சான்று. தேடிய வேலை,தற்காலிக வேலை, பின்பு நிரந்தர வேலை ஆகியவற்றை துல்லியமாக தேதி முதற்கொண்டு நினைவில் வைத்து துல்லியமாக பதிவு செய்திருப்பது விந்தை அளிக்கிறது.


  இத்தகைய துல்லிய நினைவாற்றல் கொண்ட தாம் கணிப்பொறி படிப்பை படிக்கவில்லை என்பதற்கு, தான் விரும்பி எதையும் செய்யவில்லை படிப்பு முதற்கூட என்று தெளிவாக தைரியமாக பதிவு செய்திருக்கிறார்.


  டிங்டாங், சாக்லேட், அணில், கரும்பு,கண்ணன் போன்ற சிறுவர் பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் படித்ததாக பதிவு செய்திருக்கிறார். எத்தனை எத்தனை சிறார் பத்திரிகைகள் அப்போது வந்து கொண்டிருந்தன என்பதனை இந்த பதிவு மூலமாக அறிய முடிகிறது.


   எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டியது அவசியம் இல்லை என்று ஒரு கண் மருத்துவர் சொன்னதை பதிவு செய்திருப்பது ஒரு வகையில் ஏற்புடையதென்றாலும் இன்னொரு வகையில் ஏற்புடையதல்ல. ஏனெனில் தமிழகத்தில் சிறப்பாக விளங்கி வரும் சித்த மருத்துவம் எண்ணெய் குளியலையும் எண்ணெய் மசாஜ் என்று சொல்லக்கூடியதையும் அதன் மூலமே நோயை குணப்படுத்துகிறது என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


     பரீட்சைக்கு அப்பா வாங்கிக் கொடுத்த யானை மார்க் பென்சிலும் அதில் வெள்ளி நிறத்தில் பொறிக்கப்பட்ட யானைப்படமும் கண்முன்னே கட்சியாக விரிகிறது.


அந்த கானமயிலைக் காண வேண்டி ஒருமுறை நியூட்டன் அருங்காட்சியத்திற்கு செல்ல மனது ஏங்குகிறது.


   தூத்துக்குடியில் பெரிய வணிகம் செய்த மச்சாடோ அவர்கள் பதிவு சிறப்பு.


   திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தவருடைய பையன் சிவப்பிரசாத் தான் இன்றைய தொழிலதிபரான ஷிவ் நாடார். இவர் அற்புதராஜ் அவர்களின் நண்பர் என்பது நமக்கு புதிய தகவல். தாம் படித்த பள்ளிக்கு அவர் செய்த உதவியும் பதிவு செய்திருப்பது ஷிவ்நாடாருக்கும் இந்த பள்ளிக்கும் பெருமை.


  கோனார் நோட்ஸ் வெளியிட்ட ஐயம் பெருமாள் கோனார் தமக்கு ஆசிரியராக இருந்தது சிறப்பு என்று பதிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி.


   பள்ளியில் படிக்கும் போதே மு.வரதராசனின் அனைத்து நாவல்களையும் படித்து முடித்திருந்தேன். ஜெயகாந்தன் கதைகளை எல்லாம் எப்போது படித்தேன் போன்ற கட்டுரை இவருடைய வாசிப்பை நமக்கு கண் முன்னே கடலென விரிக்கிறது. அந்த வாசிப்பின் தாக்கம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பது நாம் அற்புதராஜ் அவர்களை விந்தையாக பார்க்கத் தோன்றுகிறது. அவர் வாசித்த புல்புல் தாரா இசையினை அவரிடம் ஒருமுறை வாசித்துக் கேட்க மனம் ஏங்குகிறது.


    பணிக்காலம் குறித்த கட்டுரை அவரது பணிக்கால அனுபவங்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. 


  'விசாரணை' எனும் தலைப்பில் அமைந்த கட்டுரை நல்ல நகைச்சுவையை அள்ளித் தெளிக்கிறது.


    'டவுண் பஸ்ஸில் நின்று கொண்டு ஒரு பயணம்' எனும் சிறுகதை ஆங்காங்கே புதுமைப்பித்தனை நினைவுபடுத்திப் போகிறது.


   'மரம் வைத்தவன்', 'அழைக்கிறவள்' இருதலைப்பிலான கதைகளும் இவர் வாசித்த ஜெயகாந்தனை கண்முன்னே நிழலாட வைக்கிறது. 


   அருட்திரு. மா.ஆ. இஞ்ஞாசி மற்றும் கோபால் ராஜாராம் இருவருடைய அணிந்துரைகள் இவர் மீது கொண்ட நேசத்தினை, இவர் எழுத்தின் மீது கொண்ட வாஞ்சையினை நமக்கு காண்பிக்கிறது. நண்பரும் கவிஞருமான ஸ்ரீரங்கம் சௌரிராஜனுடைய முன்னுரை நட்பின் சான்றாக பரிமாணம் தருகிறது.


  'காலம் தான் மனிதனை புதிது புதிதாக வார்த்துச் செல்கிறது' என்று வழிநெடுக அழியாத சுவடுகள் எனும் தலைப்பிற்குள் புகும் முன் நமக்கு நம்மை அழைத்துச் செல்லும் அந்த வரிகளில் மெய்மறந்து நிற்கிறேன். ஆம்! அந்தக் காலம் தான் நம்மை உயிர்த்து வைத்திருக்கிறது. புதிய புதிதாக வாசிக்க, தேடத் தூண்டுகிறது.


   இன்னும் இன்னும் வாசித்து எழுதிக் கொண்டிருக்கும் அற்புதராஜ் அவர்களை பாதம் தொட்டு வணங்கத் தோன்றுகிறது.