சிவ.முத்து லட்சுமணன் தந்த 'பெண் மனசு' என்ற சிறுகதை அம்புலிமாமா கதை போல இருந்தாலும் அற்புதமாக, அர்த்தமுள்ளதாக இருந்தது. மாயாஜாலக்கதையாக இருந்தாலும் சிந்திக்கும்படியான சிறந்த கதையாக இருந்தது. 'பெண், அவள் சம்பந்தப்பட்ட. முடிவுகளை அவளே எடுக்கும்போது, தேவதையாக இருக்கிறாள். முடிவுகள், அவள் மீது திணிக்கப்படும் போது, சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்' என்பதின் கதையின் உள் அர்த்தம் உண்மையானது.
கோபாலன் நாகநாதனின் 'பரம்பரை வீடு' என்ற சிறுகதை சோகத்தின் உச்சமாக இருந்தது. வயதான காலத்தில் அவர்பாட்டுக்கு நிம்மதியாக வசித்து வந்த அருணாசலத்தை, வீட்டை விற்கப்போகிறேன் என்று மகனும் மருமகளும் வற்புறுத்தி, அவர் தாங்கமுடியாத மன உளைச்சலில் இறந்துப்போனது மிக வருத்தத்துக்குரியது. இது கதையாக இருந்தாலும், இப்போது இதைப்போன்ற கொடுமைகள் நாட்டில் ஆங்காங்கே நடந்துதான் வருகிறது.
நிரஞ்சனாவின் 'யாதுமாகி நின்றவள்' தொடர்கதை எனக்கும் இப்போதுதான் கொஞ்சம் பிடிப்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த கதையில் யாழினிக்கு தெரியாத மர்மங்கள் மட்டும் நிறைய இருக்கிறது என்பது புரிகிறது. யாழினியிடமிருந்து மறைக்கப்படும் உண்மை என்ன என்று தெரிந்துக்கொள்ள நானும் ஆவலுடன் இருக்கிறேன்.
பங்குனி உத்திரத்தில்தான் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன் , தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது என்ற தகவலை 'திருமணம் கைக்கூட பங்குனி உத்திர வழிபாடு' என்ற கட்டுரை மூலம்தான் நான் முதன் முதலாக அறிந்தேன்.
'ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை இப்படியும் தடுக்கலாம்..!' என்ற தகவலை படித்தபோது எனக்கு ஒரு நிம்மதி. இந்த எழுபது வயதிலும் எனக்கு வழுக்கை விழவில்லையே என்ற நிம்மதிதான் அது!
அவரை, கொத்தவரை இரண்டு காய்களின் மருத்துவப் பயன்களையும் அடுத்தடுத்துப் போட்டு, இனி இந்த இரண்டையுமே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு என்னை கொண்டுவந்த தமிழ்நாடு இ.பேப்பருக்கு வாழ்த்துகள்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.