கோபாலன் நாகநாதனின் 'குருடர்கள்' சிறுகதை உண்மையான குருடர்களெல்லாம் குருடர்கள் அல்ல; எதையும் ஆராயமல் மனதில் பட்டதையெல்லாம் சிந்திக்காமல் தன்னிஷ்டத்திற்கு பேசும் மனிதர்களும் குருடர்கள்தான் என்பதை உணர்த்தியது. ஆனால் இந்த கதைக்கான ஓவியத்தில்தான்; தங்களது லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் பிரியாவை பிரியனாக ஆக்கிவிட்டார்!
முகில் தினகரனின் 'ஆன்மீக அலைகள்' என்ற சிறுகதையில் அந்த வயது முதிர்ந்தவருக்கு கண்ணும் தெரியாது, காதும் கேட்காது என்ற எதிர்பாராத அதிர்ச்சியான தகவலை அறிந்தபோது, நானும் அந்த புத்தகம் படித்த இளைஞனை போலவே திகைத்துப்போனேன். ஆனாலும் அந்த தண்டபாணி ஐயாவின் நல்ல உள்ளம் போற்றத்தக்கது. அவர் அந்த இளைஞருக்கு செய்த உதவி மிகப்பெரியது. உண்மையிலேயே அவர் தெய்வத்திற்கு சமமானவர்தான்!
கே.ஆனந்தனின் 'அவதாரம்' தொடர்கதை கிராமத்து மண்வாசனையுடன் இயல்பாக செல்கிறது. சொல்லப்போனால் நானே அந்த கிராமத்து ஆசாமியிலே ஒருவராக அங்கே ஆடு மேய்த்துக்கொண்டிருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. அவதாரம் மிக வித்தியாசமான சிறப்பான தொடர்கதை.
'அரங்கனுக்கு பழைய சோறும் மாவடுவுமா?' என்ற ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன்தான் படித்தேன். எல்லாமே நான் அறிந்திராத ஆன்மீகத் தகவல்கள். ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதை இந்த கட்டுரை மூலம் எல்லோருக்கும் உணர்த்திய பிரம்ம ஸ்ரீ பாலசந்தரை பாராட்டுகிறேன்.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் யார் இந்த டி.என். தீர்த்தகிரி முதலியார் என்று பார்த்த எனக்கு, அவர் எழுத்தாளர் பகீரதன்தான் என்பதை அறிந்தபோது, ஆச்சரியமாகதான் இருந்தது. 'சத்திய கங்கை' என்ற பத்திரிகையை 33 ஆண்டுகள் நடத்தியவர், 18 ஆண்டுகள் 'கல்கி' வார இதழில் துணையாசிரியராகவும், 'ஓம் சக்தி' மாத இதழில் 14 ஆண்டுகள் ஆசிரியராகவும், 'கிசான் வர்ல்ட்' என்ற ஆங்கில வேளாண்மை இதழில் 4 ஆண்டுகள் இணையாசிரியராகவும் பணி புரிந்தவர் இந்த சுதந்திரப் போராட்ட வீரர் என்பதையும், இன்னும் பல சுவாரஷ்யமான தகவல்களையும் அறிந்தபோது மலைத்துப் போனேன்!
சிறுவர் உலகம் பகுதி மிகச் சிறப்பாக இருக்கிறது. குழந்தைகளின் கை வண்ணம் ஒவ்வொன்றும் அழகிலும் அழகாக இருக்கிறது.
'கவலைப்படாதே சகோதரா' சிறுகதை மூலம் பெரியவர்கள் சிறியவர்களுக்கென்று எல்லோருக்குமே ஏதாவது பிரச்சனை இருக்கும் என்பதையும், அதை விட்டு விட்டு கவலையில்லாமல் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர முடிந்தது.
அருப்புக்கோட்டை செல்வத்தின் 'கடிகாரம்!', 'பலூன்!' என்ற இரண்டு சிறுவர் பாடல்களுமே சிறப்பு. நல்ல ஓசை நயத்துடன் நல்ல கருத்துகளையும் இந்த இரண்டு பாடல்களும் உணர்த்தியது.
எல்லாவகையிலும் சிறப்பான பல அம்சங்களை தரும் தமிழ்நாடு இ.பேப்பருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.