அன்னாசிப் பழத்தின் அருமை பெருமைகளையெல்லாம் தமிழ்நாடு இ. பேப்பரில் படித்தபோது அன்னாசிப் பழத்திற்கு இவ்வளவு சிறப்பாயென்று ஆச்சரியப்பட்டேன். தொப்பையை கரைக்கும் சக்தியும் அன்னாசிக்கு இருக்கிறது என்றவுடன் இதை தொடர்ந்து சாப்பிட எனக்கு ஆவல் ஏற்படுகிறது.
மு.மதிவாணனின் 'தப்புக் கணக்கு' சிறுகதை சிறப்பாக இருந்தது. ஜானகியின் எச்சரிக்கை உணர்வை போலவே, அந்த ஆட்டோ டிரைவரின் எச்சரிக்கை உணர்வும் சரியானதுதான். ஆனாலும் அவர்களின் எச்சரிக்கை உணர்வை கடைசியில் அறிந்தபோது கொஞ்சம் சிரிப்பும் வந்தது!
சுமதி முருகனின் 'நேரத்தைக் கடைப்பிடி' சிறுகதை நேரத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறையை அடுத்தடுத்த சம்பவங்களுடன் அழகாக விளக்கியது. இது பள்ளிக்கூட மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை.
ஸ்ரீ ரங்கம் சரவணனின் 'ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை' என்ற கட்டுரை மூலம் நான் அந்த திருவிழாவை பற்றி தெளிவாக தெரிந்துக்கொண்டேன். ஒரு வருடத்தில் 365 நாட்களில் 322 நாட்கள் உற்சவம் காணும் பெருமாள் ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான் என்ற தகவல் வியப்புக்குரியது.
பாரதியாரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை படிக்கும்போதெல்லாம் பரலி. சு. நெல்லையப்பரைப் பற்றியும் சில சில தகவல்களை படித்திருக்கிறேன். ஆனாலும் இந்த கட்டுரைதான் அவரைப்பற்றி முழுமையாக அறிய உதவியது.
தெய்வீக அருள் தரும் ஆன்மீகம் பகுதியில் 'பிறவிப்பிணியைத் தீர்க்கும் திருத்தலம்' என்ற கட்டுரையில்
'திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவிலைப்பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கப்பட்டிருந்தது. அதனால்தான் நல்ல பல்சுவை கட்டுரைகளை தரும் தமிழ்நாடு இ. பேப்பர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.