திருச்சி சுகபாலாவின் 'முற்போக்கு' என்ற சிறுகதை, வைரவன் என்ற நல்ல எழுத்தாளரைப் பற்றி, நல்லதை எழுதுவதோடு மட்டுமில்லாமல் அதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கும் எழுத்தாளரைப் பற்றி எழுதியிருந்தது பாராட்டும்படி இருக்கிறது. ஊருக்குதான் உபதேசம் என்று வாழாத அந்த முற்போக்கு எழுத்தாளர் வைரவனை நானும் பாராட்டுகிறேன்.
தஞ்சாவூர் ஹரணியின் 'வாழ்தலே பிறருக்குத்தாம்' என்ற நல்ல விசுவாசமுள்ள காவேரி என்ற வேலைக்காரியை பற்றிய கதை பெருமிதமாக இருந்தது. ஆனாலும் நடைமுறையில் இதைப்போன்ற விசுவாசமுள்ள வேலைக்காரிகள் கிடைப்பது குதிரைக்கொம்புதான்!
கே.ஆனந்தனின் 'அவதாரம்' தொடரில் சென்னையன் மழைக்கு ஆடுகளை நனையாமல் ஓட்டிச்சென்றவிதம் அப்படியே கண்முன் நிற்கிறது. சென்னையன் மனசு மழையை பற்றி தத்துவமாக நினைப்பது அவனது கள்ளமில்லாத மனதை உணர்த்துகிறது. 'காசில்லாதவன் வாங்கற கடன் மாதிரி விறு விறுனு ஏறுது பொழுது...வவுத்துக்குள்ள பசி குய்யோமுன்னு கத்த ஆரம்பிக்கிறது...' போன்ற வரிகள் இந்த தொடர்கதை எழுத்தாளரின் எழுத்துத்திறனை உணர்த்துகிறது. சரி, இந்த தொடரில் ஆடுகள் நனையவில்லை; ஆனால் படத்தில் ஒரு அழகி நனைகிறாளே அது யார்? ஆமாம், அது செல்லியாகதான் இருக்கும்!
ஒடுக்கப்பட்டோரின் முன்னோடிப் போராளியான கே.பி.எஸ்.மணியை பற்றி முதன் முதலாக தமிழ்நாடு இ.பேப்பரில்தான் படித்தேன். பழைய ஒன்றினைந்த தஞ்சை மாவட்டத்தில் இவர் 50,60,70 களில் ஆதிக்க சாதியினரிடமிருந்து ஒடுக்கப்பட்டோரை விடுதலைப்பெற வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
'சேமிப்பு பிற்காலத்தில் நமக்கு உதவும். சேமிப்பதையே மனதில் கொண்டு நிகழ்காலத்தை இழக்க கூடாது. நாம் சம்பாதிக்கும் பணத்தை சிறிது செலவழித்து மகிழ்வுடன் வாழ வேண்டும். பணத்தை குறிக்கோளாக கொண்டு நம் வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது' என்பதை தெளிவாக உணர்த்திய ' வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதுமா?' என்ற கட்டுரை எல்லோரும் படித்து மனதில் பதிய வைக்க வேண்டிய ஒன்றாகும்.
அருப்புக்கோட்டை செல்வத்தின் 'நடைவண்டி', மடிப்பாக்கம் வி.பிரபாவதியின் 'சின்னப்பாப்பா எங்கள் செல்ல பாப்பா', வேம்பார் ச.கிறிஸ்துவ ஞான வள்ளுவனின் 'தண்ணீர் பழமே...!' என்ற மூன்று சிறுவர் பாடல்களும் மனதில் முக்கனியாக இனிக்கிறது.
நன்னிலம் இளங்கோவனின் 'கூண்டுக்கிளி பறந்தது' என்ற சிறுகதை தொகுப்பு புத்தகத்தை பற்றி குடந்தை பரிபூரணனின் நூல் விமர்சனம் மிகச்சிறப்பாக இருக்கிறது. அந்த புத்தகத்தின் சிறப்பை அப்படியே உணர்த்துவது போலிருக்கிறது. இந்த புத்தகத்தின் ஆசிரியர் நன்னிலம் இளங்கோவன் அவர்களுடைய படைப்பு ஒன்றை கேரள அரசு தமிழ்ப் பாடநூலில் ஒரு பாடமாக சேர்த்துள்ளது. அந்தப் படைப்பும் நம் தமிழ்நாடு இ.பேப்பரில் வெளியானதுதான் என்பதும் அவருக்கும், நமது பத்திரிகைக்கும் பெருமை தரும் விஷயமாகும்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.