பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது என்று மத்திய அமைச்சர் பேசி இருக்கிறார்.
பயங்கரவாதிகளை சமாளிக்கும் விஷயத்தில் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி இருக்கின்றன.
அமெரிக்கா அதிபர் பாகிஸ்தான் பிரதமருடன் நேரடியாக தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார்.
பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்து விரட்டினால் மட்டுமே உலகுக்கு நிம்மதி உண்டாகும். அதற்கு பாகிஸ்தானை ஒப்புக்கொள்ள செய்யுமாறு உலக நாடுகள் நெருக்கடி கொடுக்க வேண்டும்.
உள்நாட்டில் எத்தனை பயங்கரவாத தாக்குதல்களை தாங்கள் எதிர்கொண்டாலும் பாகிஸ்தானுக்கு புத்தி வருவதே இல்லை. தீவிரவாதத்தை ஆதரிப்பது என்பது அதனுடைய ரத்தத்திலேயே ஊறிப் போய்விட்டது போலிருக்கிறது.
100 நாள் வேலை திட்டத்துக்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு அளிக்க வேண்டிய நிதியை இதுவரை அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. அந்த நிதியில் நான்கில் மூன்று பங்கு இப்போது விடுவிக்கப்பட்டிருக்கிறது. மீதி நிதியை விடுவிப்பதற்காக திரும்பவும் தமிழக அரசு போராட வேண்டி இருக்கும் போலிருக்கிறது.
சூடோடு சூடாக தமிழகத்துக்கு அளிக்காமல் நிறுத்தி வைத்திருக்கும் கல்வி நிதியை மத்திய அரசு விடுவித்தால் வரப்போகும் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உயரும்.
சந்தையில் விற்கப்படும் ஓ ஆர் எஸ் பானங்களை வாங்கி பயன்படுத்தும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பல மருந்து கடைகளில் பழரசங்களை ஓ ஆர் எஸ் என்ற பெயரில் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அதில் ஏதோ கொஞ்சம் உப்பை சேர்த்து இருப்பார்கள் போல இருக்கிறது. இவற்றையெல்லாம் வாங்கி பயன்படுத்துவது ஆபத்தானது என்பதை நாம் உணர வேண்டும்.
ஓ ஆர் எஸ் பவுடரில் என்னென்ன கலந்திருக்கிறது என்ற விகிதாச்சாரத்தை வெளியிட்டு இருப்பது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏமனிலிருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக அவ்வப்போது இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். சர்வதேச கடல் எல்லையில் பயணிக்கும் அனைத்து நாட்டு கப்பல்களையும் இவர்கள் தாக்கி வருகின்றனர்.
இதனால் உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு மிகப்பெரும் ஆபத்து நிலவுகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா ஏமன் நாட்டில் இருக்கும் ஹவுதி நிலைகளை அடிக்கடி தாக்கி வருகிறது. இந்த தாக்குதலில் பிரிட்டனும் இப்போது சேர்ந்து இருக்கிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு நல்ல புத்தி வரும் வரை தாக்குதல் நடத்தி அவர்களை ஒடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்