அனைவருக்கும் காலை வணக்கம் !
அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு கொள்கையால் உலகப் பொருளாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது. ஆசிய ஐரோப்பிய பங்கு சந்தைகள் பாதாளத்தை நோக்கி சரிகின்றன.
அமெரிக்காவின் வர்த்தக உலகம் ட்ரம்ப்பின் கொள்கையால் அலை பாய்கிறது என்றால் அமெரிக்காவின் சில மாநிலங்களில் புயலும் வெள்ளமும் புரட்டியெடுக்கின்றன. பலர் இறந்து இருக்கிறார்கள்.
ஒரு லட்சம் பேருக்கு மேல் மின்சாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். அடுத்ததாக அங்கு வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
வங்கக் கடலில் புயல் சின்னம் ஏற்பட்டு இருப்பதால் டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. இயற்கை சீற்றம் அறுவடைக்கு காத்திருக்கும் பயிர்களை அழித்து விடுகிறது.
ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழகத்தில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பை பார்த்தாவது மற்ற மாநிலங்களில் பதவியில் இருப்பவர்கள் தங்களது செயல்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
முகில் தினகரனின் " ஆன்மீக அலைகள் " சிறுகதை வித்தியாசமான யாரும் எதிர்பார்க்காத முடிவைத் தந்தது அருமை.
" குருடர்கள் " சிறுகதை ஒருவரை அவசரத்தில் எடை போட்டு அனாவசியமாக திட்டக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியது.
அவதாரம் பகுதியில் " சந்தைக்குப் போகணும் "
கதை வட்டார மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ஆடு வளர்க்கும் ஒருவன் மறுநாள் சந்தையில் ஆடுகளை விற்று அதில் பண்டமாற்று போல என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்று தனக்குள் கற்பனை செய்து கொள்கிறான். அருமையான நடையில் அழகாக செல்கிறது கதை.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்.