வணக்கம் !
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆலோசகராக விளங்கும் எலான் மஸ்க்கை அமெரிக்க மக்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அவருடைய யோசனையின் பேரில் டிரம்ப் செயல்படுவது பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. " எலான் மஸ்க்கை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புங்கள் "
என்ற பதாதைளை ஏந்தி இருக்கின்றனர்.
ஒருபுறம் ட்ரம்ப் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக முயற்சி செய்து வரும் நேரத்தில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தினமும் தொடர்கிறது.
பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆண்டு முழுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் எட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.
பண்டிகை நாட்களில் பட்டாசை கொளுத்தி மக்கள் மகிழ இவர்கள் தங்களது இன்னுயிரை இழக்கிறார்கள் என்பது சோகத்தை அளிக்கிறது,
மாநில சட்டமன்றங்களில் இயற்றப்படும் மசோதாக்களை எவ்வளவு காலத்தில் அங்கீகரிக்க வேண்டும் அல்லது பைசல் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் மாநில ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது.
அதை எதிர்த்து மறு ஆய்வு மனுவை சமர்ப்பிக்கப் போவதாக மத்திய அரசு கூறி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாராளுமன்றத்தால் மாற்றத்தக்கதே என்ற நமது பத்திரிகையின் கருத்து நூறு சதவீதம் பொருத்தமானது.
பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும். பல்கலைக்கழகங்களுக்கு
வேந்தராக ஆளுநர் இருக்க மாட்டார் என்பது போன்ற தமிழக அரசின் சட்ட திருத்தங்களுக்கு யுஜிசி
மூலம் ஏதாவது விதிகளை ஏற்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு மத்திய அரசு முயற்சிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
பல்கலைக் கழகங்களுக்கு நிதி உதவியை நாங்கள் அளிப்பதால் அவற்றின் நிர்வாகம் எங்களது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்பதுதான் மைய அரசின் நிலைப்பாடாக தெரிகிறது.
ரயில்களில் கூடுதல் சுமையை எடுத்து சென்றால் அபராதம் என்று ரயில்வே அறிவித்திருக்கிறது. முதலில் டிக்கெட் எடுத்துவிட்டு தான் பயணிக்க வேண்டும் என்பதை இந்திய ரயில்வே நிலை நிறுத்த வேண்டும் என்பதுதான்
கட்டணம் செலுத்தி ரயிலில் பயணிக்கும் அனைவரது எண்ணமுமாக இருக்கிறது.
வடநாட்டில் பெரும்பாலானோர் டிக்கெட் எடுப்பதில்லை என்பதையும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் அவர்கள் அடாவடியாய் அமர்ந்து ஓசியில் பயணிக்கிறார்கள் என்பதையும் ரயில்வே கண்டு கொள்வதே இல்லை.
ஒடிசாவில் இருந்து 15 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்யலாம் என்று நினைத்த இளைஞர் கைது செய்யப்பட்டு களி சாப்பிட்டு வருகிறார்.
பல இளைஞர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதை விரும்புகிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பணயம் வைக்கிறோம் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
-வெ. ஆசைத்தம்பி
தஞ்சாவூர்