tamilnadu epaper

விருது

விருது

*

    காந்தி மைதானத்தில் 'பைந்தமிழ் மாமணி' விருது சண்முகத்துக்கு வழங்கும் விழா பிர்மாண்டமாக ஏற்பாடாகிக்

கொண்டிருந்தது.

  

  ஏ4 அளவில் பல வண்ணத்தில் சண்முகம் படத்துடன் கண்ணைப்பறிக்கும் அழைப்பிதழ்

 

    பல வண்ண பதாகையில் அசலூரே விழாக்கோலம் பூண்டிருந்தது.

 

     அசலூரில் அதன் சுற்றுப்புற அறப்பணிகள் எல்லாம் சண்முகத்தின் உழைப்பால் நடந்தேறியவை..

அவரின் உழைப்பால் மற்றவர்கள் உயர்ந்தார்களே தவிர அவர் இன்றும் ஏணியாக இருப்பதால்தான் இந்த எழுபது வயதில் ஊரும்..உலகமும் கண்டுகொண்டு செல்வந்தர்கள் எல்லாம் ஒன்றுகூடி அவர் பெயரைச்சொல்லி அக்கம் பக்கத்து வசூலுடன் விழா கோலாகலமாக மின்னிக்

கொண்டிருந்தது.

 

   முதலில் விருது வாங்க சண்முகம் எவ்வளவோ மறுத்தும் கட்டாயத்தின் பேரில் கடைசியில் வேறுவழியில்லாமல் ஒத்துக்கொண்டார்.

 

    விழா தொடங்கியது ஒருபக்கம் தாரை தப்பட்டை முழங்க மேளதாளத்துடன் தலைவர் தலைமையில் விழாக்குழுவினர் சண்முகத்துக்கு சந்தன மாலை அணிவித்து மேளதாளத்துடன் அழைத்து வந்து மேடை ஏற்றினர். 

 

   சண்முகத்துக்கு பாடை ஏற்றியதுபோல இருந்தது!.. கூச்சம் மேலிட முகத்தில் மகிழ்ச்சி இல்லை பிரபல அரசியல்வாதிகளைப்போல பொய்யாக சிரித்துவைத்தார்.

 

    சண்முகத்தை சூழ்ந்த ஒப்பனை முகங்கள் எல்லாம் சண்முகத்துக்கு பொன்னாடைப்

போர்த்தி..'பைந்தமிழ் மாமணி' விருது வழங்கிட சண்முகம் ஊடகங்களின் ஒளி மழையில் நனைந்து கொண்டிருந்தார்..

 

   ஒரு வழியாக இயல்..இசை..

நாடகமாக விருது வழங்கும் விழா இனிதே நடந்து முடிந்தது...

அதற்குமுன் முதல் பந்தி உணவு விருந்து முடிந்திருந்தது. 

 

   ஒரு தொண்டர் ஓடி வந்து தலைவரிடம் உணவுப்பற்றாக்

குறையை கூறிக்கொண்டிருந்தார்.

 

    தலைவர், சண்முகத்தைப்பார்க்க சண்முகம் சற்றே குனிந்துகொண்டார்..

 

     அதை கவனித்த தலைவர் சண்முகத்திடம் ஓடிவந்து "ஐயா, நாமப்போலாமா?...

வாங்க!. "என்றபடி செயலரை அழைத்து சண்முகத்தால் தூக்கிக்கொண்டு போகமுடியாத 'பைந்தமிழ் மாமணி' விருதை தூக்கிக்கொண்டுப்

போய் தன் காரில் வைக்க பணித்தார்.

 

 "ஐயா, வாங்க நாம போகலாம்!" என்று சண்முகத்தை அழைக்க சண்முகம் தயங்கி நின்றார்.

 

"என்னையா ..என்ன தயக்கம்?..சொல்லுங்க!...செய்கிறேன் என்றார் தலைவர்.

 

"கேட்கிறேன்னு தப்பா நினைக்காதிங்க ...இந்த மாதம் வீட்டு வாடகை கொடுக்க முடியல!...அதற்கு ஏதாவது உதவி செய்தா..அந்த நன்றியை மறக்கமாட்டேன்.

 

 வீட்டுக்காரி விருதுன்னா பணமுடிப்பு ஏதாவது தருவாங்க போய்யான்னு பிடிவாதமா தள்ளிவிட்டா அதனாலத்தான் வந்தேன்....

உங்களுக்கே தெரியும் இந்தப்பேருப்புகழ் எல்லாம் நான் விரும்பக்கூடியவனா தம்பி!...

 

       இப்ப வெறுங்கையோடு வீட்டுக்குப்போனா..."

என்று பாதி விழுங்கி பாதியை சொல்லிக்கொண்டிருந்தார் சண்முகம்.

 

  அதிர்ச்சியில் கையை பிசைந்து கொண்டு கொடிமரம்போல் நெடுமரமாய் நின்றுகொண்டிருந்தார் தலைவர்.

 

       பணமுடிப்பு ஏதும் இல்லை! ..இல்லை!..

என்று அசைந்து

கொண்டிருந்தது வண்ணக்கொடி.

 

  -- அய்யாறு ச.புகழேந்தி