கனிவான சொற்களையே பேச வேண்டும்
காற்றாக எண்திசையும் வீச வேண்டும்
இனிதான செயல்களையே செய்ய வேண்டும்
இதயத்தில் கருணையினை உய்ய வேண்டும்
தனிப்பாதை நமக்காக போட வேண்டும்
தன்னுழைப்பால் நாமுயர்ந்து வாழ வேண்டும்
தனித்திறனை மெருகேற்றி வளர்க்க வேண்டும்
தரணியிலே நம்புகழை நாட்ட வேண்டும்
பண்பிற்கே முதலிடத்தைத் தருதல் வேண்டும்
பணத்தாசை விட்டொழிக்க பழக வேண்டும்
மண்போற்றும் சேவைகளில் நாட்டம் வேண்டும்
மனிதந்தான் உயர்வென்று முழங்க வேண்டும்
விண்ணளவு நம்நோக்கம் உயர வேண்டும்
விரிவான சிந்தனையில் மூழ்க வேண்டும்
எண்ணத்தை நேர்மறையாய் மாற்ற வேண்டும்
எழுகதிராய் தினந்தோறும் ஒளிர வேண்டும்
சலிப்பின்றி வாழ்ந்திடவே ஊக்கம் வேண்டும்
சலனமின்றி வாழத்தான் பயில வேண்டும்
நலிவில்லா மனத்தைத்தான் நாட வேண்டும்
நன்னெறியை நாள்தோறும் நவில வேண்டும்
வலிமையோடு எதையும்தான் அணுக வேண்டும்
வரமென்று வாழ்வைத்தான் நினைக்க வேண்டும்
வலிதந்த பாடங்களைக் கற்க வேண்டும்
வழிகாட்டி நாமெனவே உணர்த்த வேண்டும்!
-கவிஞர் மு.வா.பாலாஜி
ஓசூர்