"ஏண்டா திவாகர்... வீட்ல வயசுக்கு வந்த தங்கச்சிக ரெண்டு பேர் கல்யாணத்துக்கு நிற்கும் போது.... நீ பாட்டுக்கு எவளையோ காதலிச்சிட்டு... அவளைத்தான் கட்டிக்கப் போறேன். அதுவும் "உடனே கல்யாணம்"ன்னு குதிக்கிறியே... இது நியாயமாடா?..."
திவாகர் பதிலேதும் பேசாமல் நிற்க, "சரி... அப்படித்தான் ஒரு நல்ல பொண்ணையா காதலிச்சிருக்கே?.. போயும்... போயும் ஒரு கால் சூம்பிப் போய்... ஊன்றுகோலோடு நடந்திட்டிருக்கிற ஒரு ஊனமான பொண்ணுக்காக உன்னோட குடும்பத்தையே பகைச்சுக்கிறியே.. இது உனக்கே நல்லா இருக்கா?...ஊரே உன்னைக் கேவலமா பேசும்டா!"தண்டபாணி மாமா கத்தலாய்க் கேட்டார்.
மெலிதாய்ச் சிரித்தபடி அவரருகே வந்த திவாகர், "மாமா... இப்ப நான் இருக்கற நிலைமையிலே... நான் சம்பாதிச்சு ரெண்டு தங்கைகளுக்கும் கல்யாணம் பண்றதுங்கறது.... நடக்காத ஒண்ணு!... அதான் ஸ்கூல்ல என் கூடப் படிச்ச வசதியான வீட்டுப் பெண்ணான கலைவாணி கிட்டே என்னோட நிலைமையை சொன்னேன்!.... அவ "என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னோட நகைகள் எல்லாம் உனக்குச் சொந்தமாயிடும்... அதை எடுத்து உன் தங்கச்சிக கல்யாணத்தை நடத்திக்கோ!"ன்னு சொன்னா... அந்த ஒப்பந்தத்தில்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்!"
அவன் தியாக உள்ளத்தைப் புரிந்து கொண்ட மாமா, "அதுக்காக.... ஒரு நொண்டிப் பெண்ணை..." தழுதழுக்க,
" மாமா... நான் பண்ணிக்கப் போற இந்தக் கல்யாணம் எனக்காக இல்லை!... என்னோட ரெண்டு தங்கச்சிகளுக்காக!... ஊன்றுகோலோட நடக்கிற அந்தக் கலைவாணிதான் இப்ப எனக்கு ஊன்றுகோலா இருக்கா" என்று கரகரத்த குரலில் திவாகர் சொல்ல,
மாமாவே ஒரு நிமிடம் கண்கலங்கி நின்றார். "என்னை மன்னிச்சிடு திவா!"
(முற்றும்)
முகில் தினகரன், கோவை.