"ஏம்பா கோபாலு... உன்னையும் உன் சம்சாரத்தையும் ஊர்ப் பஞ்சாயத்துல வெச்சு... ஒரு வருஷத்துக்கு முன்னாடியே அறுத்து விட்டாச்சல்ல?... அப்புறம் எதுக்குப்பா மறுபடியும் பிராது கொடுத்திருக்கே?"
"இந்த ஒரு வருஷத்துல என் மகள் செல்வி... அவ அம்மா கூடத்தான் இருந்திருக்கா!... அதனால... அடுத்த ஒரு வருஷத்துக்கு அவள் என் கூட இருக்கணும்!னு கேட்டுத்தான் பிராது கொடுத்திருக்கேன்"
"இவர் சொல்றதும் நியாயம் தானே?"கோபாலுக்கு ஆதரவாய் சில குரல்கள்.
"முடியவே முடியாது.... இந்த ஆளை நம்பி என் மகளைத் தர மாட்டேன்!... பொறுப்பில்லாத மனுஷன் அவளை சரியா கவனிக்க மாட்டான்" என்றாள் துளசி ஆவேசமாய்.
"அதுவும் சரிதான்!... ஒரு தாய் பார்த்துக்கிற மாதிரி தகப்பன் பார்த்துக்க முடியுமா?... அதுவும் இல்லாம பொட்டப் புள்ளை அம்மா கூட இருப்பதுதான் நல்லது" துளசிக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்க,
வாக்குவாதம் துவங்கியது.
ஒரு பெரிய அமளிக்குப் பின், "ச்சூ... எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருங்கப்பா" என்று பஞ்சாயத்து தலைவர் உரக்கக் கத்தி அமைதியைக் கொண்டு வந்தார்.
"எதுக்கு வீண் பேச்சு?... அந்தக் குழந்தையே கேட்டு விடுவோமே!" என்ற பஞ்சாயத்து தலைவர் சிறுமியை அழைத்து, "சொல்லும்மா.... நீ யார் கூட இருக்க ஆசைப்படுறே?... அப்பா கூடவா?... அம்மா கூடவா?" கேட்டார்.
"ஐயா!... நான் நம்ம ஊரு அரசு பள்ளியில் தான் படிக்கிறேன்!.. என் வகுப்புக்கு பக்கத்து ஊர் அனாதை விடுதியில் இருந்து அஞ்சாறு குழந்தைகள் வந்து போகுதுக!... நானும் அவங்க கூட அந்த அனாதை விடுதியில் இருக்க ஆசைப்படறேன்!"
எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க,
"என்னைக்கு என் அம்மாவும் அப்பாவும் மறுபடியும் ஒண்ணு சேர்ந்து வாழுறாங்களோ... அப்ப நான் அவங்க கூட சேர்ந்துக்கிறேன்!.. அதுவரைக்கும் அனாதை விடுதியிலேயே இருந்துக்கிறேன்! சொல்லி விட்டு வேக வேகமாய் நடந்த சிறுமியை கண்ணீரோடு பார்த்த ஊர் ஜனம், அப்படியே தலையைத் திருப்பி கோபாலையும் துளசியையும் கோபமாய் பார்த்தனர்.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்.