கலைவாணி அந்த பங்களா வீட்டின் வேலைக்காரி.
அன்று வரப்போகும் விருந்தினர்களுக்காக அசைவம் சமைக்கும் போது மகன் குணசீலனை நினைத்தாள். ஏழாம் வகுப்புப் படிக்கும் அவன் ஒரு அசைவ விரும்பி. சிக்கன் வறுவலென்றால் சீறிப் பாய்வான். ஆனால் கலைவாணியால் அவனுக்கு செய்து தரவும்... வாங்கித் தரவும் முடிவதில்லை.
"எப்படியும் வீட்டுக்குப் போகும் போது நமக்கும் கொஞ்சம் சிக்கன் வறுவல் குடுப்பாங்க!...அதைப் பையனுக்குக் குடுக்கலாம்"
மாலை. விருந்தினர் எண்ணிக்கை அதிகமாகி விட அசைவப் பதார்த்தங்கள் அத்தனையும் காலி.
அவளுக்கு அழுகையே வந்து விட்டது. .
சாப்பிட்ட இலைகளை எடுத்துக் கொண்டிருந்தவளின் முகம் பிரகாசமானது. ஒரு இலையில் சிக்கன் வறுவல்கள் அப்படியே இருக்க, அவற்றை எடுத்து ஒரு இலையில் கட்டி வைத்தாள். "அப்பாடா…இது போதும்!”
இரவு ஒன்பது மணிக்கு வீடு திரும்பினாள்.
"ம்மா…இது...எனக்கா?”
'ஆமாம்பா …சாப்பிடு
'எனக்கு வேண்டாம்மா அப்பாவுக்கு குடுத்துடுவோம்”
'ஏண்டா?”
"அப்பா தினமும் ராத்திரி சாராயப் பாக்கெட்டோட வந்து " ஒரு நாளாவது கடிச்சுக்கறதுக்கு சிக்கன் வறுவல் செஞ்சு தந்தியாடி?ன்னு உன்னைத் திட்டுவாரல்ல?.. அவரும் பாவம் எத்தனை நாளா கேட்டுட்டிருக்கார்”
விருட்”டென்று அவனை அணைத்துக் கொண்டவள், "உனக்கு கெடைச்ச சிக்கனை நீ அவருக்குக் குடுக்க நினைக்கறே…ஆனா அவரோ உனக்கு ஸ்கூலுக்குக் கட்ட வெச்சிருந்த பணத்தை மெரட்டி வாங்கிட்டுப் போயிருக்கார் சாராயம் குடிக்க!” என்று உள்ளுக்குள் பொருமினாள்.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்