tamilnadu epaper

"மொபைல் நெம்பர் ப்ளீஸ்?"

"மொபைல் நெம்பர் ப்ளீஸ்?"

காலையில் அவசர அவசரமாய் அலுவலகத்திற்குக் கிளம்பும் போதுதான் அவளை பார்த்தான் கோபி.

 எதிர் வீட்டில் குடியிருக்கும் தேவி.

 இன்று நேற்றல்ல கடந்த பத்து நாட்களாகவே அவன் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் வாசலில் வந்து நிற்பாள்.  இவனிடம் எதோ கேட்க வருபவள் போல் தெருவில் இறங்குவாள்.  பின் அப்படியே திரும்பிப் போய் விடுவாள்.

"நிச்சயம் அவள் என் மீது காதல் வயப்பட்டு விட்டாள்!.. அதைச் சொல்லத்தான் வருகிறாள்!... பின் ஏதோ தடுக்க திரும்பிப் போய் விடுகிறாள்!... சரி... பெண் அல்லவா?... அப்படித்தான் இருப்பாள்!... இன்றைக்கு இல்லாட்டி நாளைக்கு.... நாளைக்கு இல்லாட்டி நாளை மறுநாள்... சொல்லத்தான் போகிறாள்"

காத்திருந்தான்.

 "டேய்...கோபி!... அவளே வந்து சொல்லணும்னு ஏண்டா எதிர் பார்க்கறே?... ஒருவேளை நீயே சொல்லட்டும்!ன்னு அவள் காத்திருக்கலாம் அல்லவா?" அலுவலக நண்பன் சபாபதி கூற,

  "நோ.... அவளே வந்து சொல்லுவா!... ஐ யாம் ஷ்யூர்!" உறுதிப்படச் சொன்னான் கோபி.

மறுநாள் காலை, காலில் ஷூவை மாட்டிக் கொண்டு கேட்டைத் திறந்து வெளியே வந்தான் கோபி.

அவளும் அதீத துணிச்சலுடன் தெருவில் இறங்கி அவனை நோக்கி வந்தாள்.

  "ஒன் மினிட்!" தேன் குரல் ஆங்கிலத்தை மென்றது.

  "யெஸ்!" என்றான் கோபி.

  "மொபைல் நம்பர் தர முடியுமா?".

   புன்னகையோடு தன் மொபைலை எடுத்து,  "உங்க நம்பர் சொல்லுங்க... கால் பண்றேன்!" என்றான் கோபி.

  "ஹலோ... நான் கேட்டது உங்க நெம்பரை அல்ல!... உங்க ஆபீஸ்ல.... உங்க கூட வேலை பார்க்கிற ஹரியோட நம்பரை"

அதிர்ந்து போன கோபி,  "ஹரி நம்பர் உங்களுக்கு எதுக்கு?".

   "ஆக்சுவலா... அவரை நான் கடந்த ஆறு மாசமா ஒரு தலையாய்க் காதலிக்கிறேன்.... இன்றைக்கு அவரை போன்ல கூப்பிட்டு ப்ரபோஸ் பண்ண போறேன் அதுக்குத்தான்"

உள்ளுக்குள் இதயம் சிதறிப் போக, வாய்  மட்டும் ஹரியின் நம்பரை சோகமாய் சொன்னது.

முற்றும்.

முகில் தினகரன் கோயம்புத்தூர்.