போதாக்குறைக்கு" />
புது மணப்பெண் சவிதா தன் ஆசைக் கணவன் சுதாகருடன் ஷாப்பிங் செல்ல கிளம்பிய போது, "நானும் வர்றேன்" என்றபடி அவள் மாமியாரும் கிளம்ப முகம் வாடினாள் சவிதா.
போதாக்குறைக்கு காரில் ஏறும் போது, "அம்மாடி... நீ போய் பின் சீட்ல உட்கார்ந்துக்கோ" என்று சொல்லி அவளைப் பின்னால் தள்ளி விட்டு தான் முன் சீட்டில் டிரைவிங் பண்ணும் சுதாகருக்கு அருகில் அமர்ந்து கொண்ட போது சவிதா நொந்தே போனாள்.
"இத்தனை வயசாகியும் இன்னமும் இங்கிதம் தெரியலை இதுக்கு".
மனசுக்குள் மாமியாரைத் திட்டி தீர்த்தவள், அன்றிரவே கணவனிடம் தன் ஆற்றாமையைக் கொட்டி அழுதாள்.
" விடு சவிதா... அம்மாவிடம் நான் பேசி இனிமேல் நீயே முன் இருக்கையில்.... என் பக்கத்தில் உட்கார்ந்துட்டு வர்ற மாதிரி செய்யறேன்" என்று உறுதி கூறிச் சமாளித்தான் சுதாகர்.
மறுநாள் உள் அறையில், அரைத் தூக்கத்தில் படுத்துக் கிடந்த சவிதாவிற்கு, ஹாலில் சுதாகரும் அவனுடைய அம்மாவும் பேசிக்கொண்டிருப்பது காதில் விழ, அதில் தன் பெயரும் அடிபட கூர்ந்து கவனித்தாள்.
"டேய் உன்னோட அப்பா கார் ஆக்ஸிடென்ட்ல தான் இறந்தார்னு தெரியுமில்ல உனக்கு?"
"ம்...தெரியும்".
"அவர் எப்பவுமே முன்னாடி.... உட்கார்வார்... நான் பின்னாடி இருப்பேன்..... அந்த விபத்து நடந்தப்பவும் அப்படித்தான் உட்கார்ந்திருந்தோம்!... ஆனா விபத்துல டிரைவரும், நானும் தப்பிச்சுக்கிட்டோம்!... முன் சீட்டில் இருந்த உங்க அப்பா மட்டும் இறந்துவிட்டார்....
அப்பயிருந்தே எனக்கு அந்த சீட்ன்னா பயம்!.... அதுல உட்கார்ந்தா உயிருக்கே ஆபத்துன்னு என் மனசுல பதிஞ்சிருச்சு...
என் மருமகள்.... நாளைக்கு இந்த வம்சத்திற்கு ஒரு வாரிசை உருவாக்கி தரப் போறவள்... அவளை நான் அங்க உட்கார வைப்பேனா?... எதுவானாலும் எனக்கே ஆகட்டும்... அவ நல்லாயிருக்கணும்.."
தாயின் பதிலில் சுதாகர் நெகிழ்ந்தான்.
உள் அறையிலிருந்த சவிதா "குபுக்"கென்று அழுதே விட்டாள்.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை