tamilnadu epaper

"குண்டுப் பூசணி"

"குண்டுப் பூசணி"

மாலை நேர கடற்கரை.

 

"ரகு கிளம்பலாம்!.. மணி ஏழாக போகுது.... ஹாஸ்டல் வார்டன் கண்டபடி எகிறும்!" மணலிலிருந்து எழுந்த ராதா பின்பக்கம் ஒட்டியிருந்த பீச் மணலை தட்டியபடி தன் ஹை-ஹீல்ஸ் செருப்புகளை அணிந்தாள்.

 

 அவளின் கையை பற்றிக் கொண்டு எழுந்தான் ரகு.

 

  "யார்?.. குண்டு பூசணி வார்டனா?" கேட்டான்.

 

"ஆமாம்! ... ரொம்ப ஸ்ட்ரிக்ட்!... வெளியவே விடாது!... விட்டாலும் ஆறு மணிக்குள்ள வந்துடனும்!... இல்லேன்னா... அவ்வளவுதான்!... மானத்தை வாங்கிடும்"

 

   "இப்பவே மணி ஏழாயிடுச்சு நீ போய் சேரும் போது ஏழரை ஆயிடும்!" ரகு சொல்ல, 

 

   "ஏதாச்சும் ரீல் விட வேண்டியதுதான்!" 

 

   ஹாஸ்டல் வந்து விட சற்றுத் தள்ளியே பைக்கை நிறுத்தி அவளை இறக்கி விட்டான் ரகு.

 

   "ஏய்.. மணி எவ்வளவு தெரியுமா?" எரிக்கும் விழிகளுடன் ஹாஸ்டல் வார்டன் கேட்க,

 

  " இன்னிக்கு டாடி வந்திருந்தார்... அவர் கூட ஒரு ரிலேட்டிவ் வீட்டுக்குப் போயிருந்தேன்" பொய் நெம்பர் 1.

 

   "அப்படியா இப்ப யாரு கூட வந்தே?". 

 

   "டாடி கூடத்தான்!... கார்ல என்னையை இறக்கி விட்டுட்டு இப்பதான் கிளம்பினார்!..." பொய் நெம்பர் 2.

 

  "நெஜமா?"தலையை சாய்த்துக் கொண்டு வார்டன் கேட்க.

 

   " சத்தியமா மேடம்!" 

 

    தன் மொபைலை எடுத்து யாருக்கோ டயல் செய்த வார்டன் "உன் அம்மா லைன்ல இருக்காங்க பேசு!" என்றபடி ராதாவிடம் மொபைலை நீட்டினாள்.

 

   அதை வாங்கிக் காதில் வைத்தாள் ராதா.

 

    மறுமுனையில் தாயின் அழுகை.

 

    "அம்மா.. என்னம்மா ஆச்சு?... ஏம்மா அழறே?"

 

     "எங்கேடி போய்த் தொலைஞ்சே ஒரு மணி நேரமா உன்னோட செல்போன் சுவிட்ச் ஆப்ல இருந்திச்சி!" கேட்டாள்.

 

பதில் சொல்ல முடியாமல் ராதா திணற,

 

   "ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி உங்க அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாருடி!' சொல்லி விட்டு ராதாவின் தாய் பெரிய குரலில் அழ.

 

    மயங்கி விழப்போன ராதாவை வார்டன் என்ற அந்த குண்டுப் பூசணி தாங்கி பிடித்தது.

 

(முற்றும்)

முகில் தினகரன், கோவை.