கார்முகில் தவழ்ந்தோடும்
நெடுவானம் அற்புதம்
ஏரோட்டி விதை தூவிய
நீர்வயல் நெகிழ்வு
விடிவெள்ளிக் கீழ்வானின்
வைகறைத் தோரணம் அழகு
படிதுள்ளித் தாவிடும்
மீன்களின் சாகசம்
பாதங்களைத் தடவிடும்
பனிசுமந்த புல்லினம்
வேல்விழிப் பெண்ணவளின்
உதட்டோரக் குறுநகை
பாளைக் கலயங்களின்
பதநீர்ச் சுவையின்பம்
திண்ணைக் காற்றுத் தடவலுக்கு
இவையாவும் ஈடாமோ?
தினந்தினம் பூக்கின்ற
சிறுமுல்லைச் சுகந்தம்
மாட்டுச் சிறுவர்களின்
குழலோசைச் சங்கீதம்
வஞ்சியின் வளைக்கை
வளைப்பின் மோகனம்
தறிநாடாவின் இடைவிடா
சலசல சுகராகம்
எறும்புச் சாரையின்
சீர்வரிசை அதிசயம்
கரும்புப் பார்வை
கன்னியர் வசீகரம்
வெட்டவெளி வானின்
விண்மீன்கள் தெய்வீகம்
திண்ணைக் காற்றுத் தடவலுக்கு
இவையாவும் ஈடாமோ?
------------
முகில் தினகரன் கோயமுத்தூர்.