சவமாய்க் கிடந்த பவானியின் அருகிலமர்ந்து உறவுப் பெண்கள் கதற, தள்ளி நின்று அழுது கொண்டிருந்தான் அவள் கணவன் குமாரசாமி.
மெல்ல அவனை நெருங்கி வந்த ஊர்ப் பெரியவர் சன்னக்குரலில் கேட்டார். "ஏம்பா குமாரசாமி... ரெண்டு பேருக்குள்ள ஏதோ சண்டையாம்.... அதனால தூக்கு மாட்டிக்கிட்டாளாம்... நான் சொல்லலைப்பா ஊரே சொல்லுது!"
"ஊரு ஆயிரம் சொல்லும் அதெல்லாமெ உண்மையாயிடுமா?... கண்ணாலம் ஆன நாளிலிருந்து ஒரு தடவை கூட அவளும் நானும் சண்டை போட்டது கிடையாது.... அவ தூக்குப் போட்டுக்கிட்டதுக்கு என்ன காரணம்?ன்னு எனக்கே தெரியல!..." என்ற குமாரசாமியின் கண்களில் கள்ளத்தனம் தெரிய பழுத்த அனுபவசாலியான ஊர்ப் பெரியவரால் அதை யுகிக்க முடிந்தும் சரியான ஆதாரமில்லாததால் அமைதி காத்தார்.
அப்போது குமாரசாமியிடம் வந்த அவன் மகன் ஹரி, "அப்பா... ராத்திரி அம்மாவை மட்டும் தூளி கட்டி தொங்க விட்டிங்கல்ல?... அதே மாதிரி... என்னையும் தூளி கட்டி தொங்க விடுங்க.... நானும் விளையாடணும்!" என்று மழலைக் குரலில் கேட்டான்.
அவன் கையில் அவன் தாய் தொங்கிய அதே கயிறு.
ஆதாரம் இல்லையென்று அமைதி காத்த ஊர்ப் பெரியவர், சட்டென்று புரிந்து கொண்டு, குமாரசாமி சட்டையின் நெஞ்சு பகுதியைக் கொத்தாகப் பற்றினார், "கொலைகாரப் பாவி.... இப்ப இத்க்க் என்னடா சொல்றே?" என்று கத்தியபடி அவனை இழுத்துச் சென்றார் போலீஸ் ஸ்டேஷனுக்கு.
(முற்றும்)
முகில் தினகரன், கோவை.