tamilnadu epaper

அதிர்ஷ்டப் புள்ளி

அதிர்ஷ்டப் புள்ளி


சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, நல்ல படிப்பும் கிடைக்காமல், வளர்ந்த பின் நல்லதொரு வேலையும் கிடைக்காமல், தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த முருகன் இன்று தீர்மானமாய் முடிவு செய்தான் தற்கொலை செய்து கொள்வதென்று.


கடைக்குச் சென்று டாய்லெட்டிற்கு பயன்படுத்தப்படும் ஆஸிட் பாட்டில் வாங்கினான். "இது போதும் சத்தம் இல்லாமல் செத்துடலாம்"


வாங்கிக்கொண்டு திரும்பிய போது, "சார் ஒரு நிமிஷம் அப்படியே இந்தக் கூப்பனை நிரப்பித் தாங்க!" என்றார் கடைக்காரர்.


அதை வாங்கிய முருகன் திருப்பித் திருப்பிப் பார்க்க,


 "ஒண்ணுமில்லை சார்...உங்க பேர்.. அட்ரஸ்...மொபைல் நெம்பர் எழுதிக் குடுங்க குலுக்கல்ல உங்க கூப்பன் வந்தா பிரைஸ் குடுக்கறாங்களாம்!".


ஆர்வமேயில்லாமல் அதைப் பூர்த்தி செய்து கொடுத்து விட்டு அறைக்கு திரும்பினான் முருகன்.

இரவு,

அந்த ஆசிட் பாட்டிலைத் திறக்க முயற்சித்த போது அது எளிதில் திறக்க முடியாமல் போக, " ச்சை...சனியன்!" சலித்துக் கொண்டு இரு கைகளாலும் பலங் கொண்ட மட்டும் திருக, அது அவன் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்து, படீரென்று உடைய அறை முழுவதும் ஆசிட் ஆறு.


 "கர்மம்...கர்மம்...சாகறதுக்குக் கூடக் கொடுத்து வைக்கல எனக்கு!" வெறுப்புடன் கட்டிலில் சாய்ந்த முருகன் சில நிமிடங்களில் அவனையும் அறியாமல் உறங்கிப் போனான்.


மறுநாள் மதியம் மொபைல் ஒலிக்க எடுத்துப் பார்த்தான். புது எண்ணில் இருந்து அழைப்பு.


 "சார் நாங்க "சர்மா அஸோசியேட்ஸ்" கம்பெனியிலிருந்து பேசறோம்.... ஆஸிட் கூப்பன் குலுக்களில் உங்களுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது இன்று மாலை ஐந்து மணிக்கு ஆர்.எஸ்.புரத்தில் இருக்கற எங்க ஹெட் ஆபீஸுக்கு வந்து உங்க பரிசை வாங்கிக்குங்க!".


  "க்கும் என்ன பரிசு கொடுக்கப் போறாங்க?... சோப்பு டப்பா கொடுப்பானுக"


சுவாரஸ்யமே இல்லாமல் மாலை அந்த

கம்பெனியின் ஹெட் ஆஃபீஸிற்குச் சென்றான்.


"சர்மா அசோசியேட்ஸ்" கம்பெனியின் எம்.டி.யே நேரில் வந்து அவனை வாழ்த்தி "எங்க ஆஸிட்டின் இந்த ஏரியா விற்பனை உரிமையை உங்களுக்கு வழங்குகிறேன். உங்களுக்காக ஒரு ஆபீசையும் குடோனையும் நாங்களே தருகின்றோம் நீங்க அதை கவனிச்சிட்டா போதும்" என்றார்.


  "எனக்கு இதில் எல்லாம் அனுபவம் இல்லையே" முருகன் தயங்க


  "தைரியமா இறங்குங்க 30,000 பேர் போட்ட கூப்பன்ல நீங்க ஒருத்தர்தான் அதிர்ஷ்டசாலியா வந்திருக்கீங்க!.. அப்ப நிச்சயமா உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு....நிச்சயமா நீங்க ஜெயிப்பீங்க!"


அரை மனதுடன் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டான் முருகன். 


அடுத்த ஆறு மாதத்தில் அந்த ஏரியாவின் விற்பனையை அவன் மும்மடங்கு உயர்த்திக் காட்ட லாபத்தில் அவனுக்கும் பங்கு கிடைத்தது.


அவனது அதீத உழைப்பின் காரணமாகக் கிடைத்த அதீத லாபம் கண்டு வியந்து போன நிறுவனத்தின் எம் டி அவனுக்கான ஏரியாவை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி ஒரே வருடத்தில் அவனை டிவிஷனல் மேனேஜர் ஆக்கினார்.


தன்னை அழித்துக் கொள்வதற்காக வாங்கிய ஆஸிட் அவனை உயர்த்திப் பிடித்த போது, "ஆண்டவன் யாருக்கு எந்த இடத்தில் அதிர்ஷ்டப் புள்ளியை வைத்திருப்பான் என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்" என்கிற உண்மையை புரிந்து கொண்டான் முருகன்.



-முகில் தினகரன்,

கோயம்புத்தூர்.