பூங்குளம் கிராமத் தில் வசிக்கும் ஒய்வு
பெற்ற ஆசிரியர் திருமுருகன்,காலை 5 மணிக்கே எழுந்து கொள்ளும் பழக்கமுள்ளவர்.
பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.சமூக அக்கறை மிக்கவர்.
காலை கடன்களை முடித்தவுடன், அங்கிருக்கும் தெருக்களிலேயே நடைபயிற்சி மேற்கொள்வார். இவர் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது, இவரோடு மிதி வண்டி பழுது நீக்கும் கடை வைத்திருக்கும் அருணகிரியும் கலந்து கொள்வார்.
நடைபயிற்சி யின் போது இருவரும் நாட்டு நடப்புகளை பற்றி பேசுவதுண்டு.
என் மகன் என்னை சென்னைக்கு கூப்பிட்டு கிட்டே இருக்கான் என்றார் திருமுருகன்.
என்னா சார் அப்படி சொல்றீங்க... கிராமத்துல தான் சுத்தமான காத்து, நல்ல தண்ணீர் கிடைக்குது...எங்கப் பார்த்தாலும் பசுமையா இருக்கறதுனால, வெப்பம் இல்லாம, குளிர்ச்சியா இருக்கு.. இதை விட்டுட்டு நீங்க பாட்டுக்கு சென்னைக்கு போறேன்னு சொல்றீங்க.... என்றார் அருணகிரி..
தன்னைவிட இளையவர் என்பதால் அருணகிரியை திருமுருகன் ,தம்பி என்றுதான் அழைப்பார்..
தம்பி...இதப் பாருங்க... கிராமம், கிராமம்னு சொல்றீங்க...கிராமம் எல்லாம் ஒரு காலத்துல நல்லா இருந்தது...இப்ப நகரத்தைவிட மோசமா இருக்கு... காரணம் இங்க பாருங்க.... தெருவெல்லாம் எப்படி குப்பையா இருக்குன்னு....நம்ம கிராமத்துல இருக்கற குளத்தைப் போய் பாருங்க... எவ்வளவு குப்பை மிதக்குதுன்னு....சுத்தமே இல்லாம போயிடுச்சு....சாலை வசதியும் சரியா இல்ல.... தெருவிளக்கு இரவு,பகலா எப்போதும் எரிஞ்சுகிட்டே இருக்கு...!
சார்... நீங்க தான் தினசரி தெருவிளக்கு சுவிட்சை நிறுத்தி வைக்கிறீங்க... என்று அருணகிரி சொன்னதும், ஏன் அதை நீங்க செய்யக்கூடாதா? இல்ல மத்தவங்க யாரும் செஞ்சா என்ன? இதுல அப்படி என்ன சங்கடம் இருக்கு... சொல்லுங்க....
சார்... அப்படியெல்லாம் ஏதுமில்லை... கரண்ட் ஷாக் அடிச்சிடும்னு பயம் தான் காரணம்...
ஏன்... எனக்கு மட்டும் ஷாக் அடிக்காதா? ஏன் அப்படி நினைக்கனும்.... அதுக்கு காரணம், நமக்கென்னன்னு நாம நினைக்கிறது தான் காரணம்..வேற ஒன்னுமில்லை...
சார்...நீங்க நினைக்கிற மாதிரி இல்லை... ஏன் நீங்க கூடத்தான் அரசாங்கத்துக்கு இது சம்பந்தமா பல தடவை புகார் மனு எழுதியிருக்கீங்க... எந்த நடவடிக்கையும் எடுத்ததா தெரியலயே...!
அருணகிரி...இரவு பகலா தெருவிளக்கு எரியறதுனால அரசாங்கத்துக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா? பஞ்சாயத்து அதிகாரிகளும் இதைப் பத்தி கவலைப் படலை... மின்சார வாரியமும் இதுக்கொரு நடவடிக்கை எடுத்ததா தெரியல...ஆக மொத்தம் , நாம் அரசாங்கத்துக்கு கொடுக்கற வரிப்பணம் நம்ம கண்ணுக்கு நேராவே வீணாப் போயிட்டிருக்கு..!
பகல் இரவு எந்த நேரமும் தெருவிளக்கு எரியறதுனால எவ்வளவு மின்சாரம் விரயமாகுது! பல்பும் சீக்கிரம் வீணாப் போகுது....!
நம்ம கிராமத்துல மட்டும் இது நடக்குல...தமிழ்நாட்டுல இருக்கற 12000 கிராமத்துல பாதி கிராமத்துல இப்படித்தான் இரவு பகலா தெருவிளக்கு எரிஞ்சு கிட்டேயிருக்கு...நாம செலவு பண்ற அளவுக்கு மின்சாரம் உற்பத்தியும் குறைவாத்தான் இருக்கு...!
மக்கள் கிட்ட விழிப்புணர்வு இருந்தா மட்டும் தான்
அதிகாரிங்களும், அரசியல்வாதிகளும் சரியா இருப்பாங்க.... இதெல்லாம் எப்ப சரியாகும்? இதெல்லாம் எப்ப நடக்குமோ தெரியல...எப்படியோ போகட்டும்னு நம்மால இருக்கவும் முடியல....
இருவரும் பேசிக் கொண்டே நடந்து சென்றபோது, அருணகிரி ஒரு நிமிசம் நில்லுங்க...என்று சொல்லியவாறு அங்கிருந்த தெருவிளக்கு கம்பத்தை நோக்கி திருமுருகன் நடந்து சென்றார்.கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த சுவிட்சை நிறுத்தினார் .எரிந்து கொண்டிருந்த தெருவிளக்குகள் அணைத்தும் அணைந்தன. மீண்டும் இருவரும் நடைபயிற்சியைத் தொடர்ந்தனர்.
-நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.