Breaking News:
tamilnadu epaper

அன்பே கடமை

அன்பே கடமை


 டிங்.....டிங்...... என்ற தேவாலய மணி கேட்டு எழுந்தாள் செல்வி. 


       மனம் தெளிவில்லாமல் இருப்பதைப் புரிந்து கொண்டாள். எப்பொழுதுமே தூங்கி எழும்பொழுது உற்சாகமாக எழுவாள். அப்பொழுது தான் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் என்று நம்புபவள் அவள்.


   ஆனால் மன வேறுபாட்டை நன்றாக உணர்ந்தாள். காரணம் அவளுக்குத் தெரிந்தும் இருந்தது.


      இன்று விக்ரமைச் சந்திப்பதாக முடிவு எடுத்திருந்தாள். அவனுக்கு அதை நினைவூட்ட அலைபேசியை எடுத்து அவனுடைய எண்களை அழுத்தினாள். 

    

        இரண்டு முறை முயற்சி செய்த பிறகு அவன் போனை எடுத்தான். 

ஹலோ ....... சொல்லு செல்வி என்றவனிடம் இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு நாம மீட் பண்றதா சொல்லி இருந்தேன்.அதை ஞாபகப்படுத்தலாம்னு தான் கூப்பிட்டேன் என்றாள்.

   

      இதோட எத்தனை தடவை செல்வி சொல்லிட்ட! கண்டிப்பா நான் வரேன் என்றான். 


     இவன் பேசியதைக் கேட்ட செல்விக்கு இன்னும் குழப்பம் அதிகமாயிற்று. அவளுடைய நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது.


       இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு அலுவலகம் செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருந்தாள். 

   

எக்ஸ்கியூஸ்மி மேடம்..... என்ற குரல் கேட்டுத் திரும்பியவள் புதிதாக ஒரு ஆடவனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டு எஸ்.... என்றாள்.


   தன்னிடம் இருந்த விசிட்டிங் கார்டைக் காட்டி இந்த அலுவலகத்திற்கு எந்தப் பேருந்தில் செல்ல வேண்டும்? என்றான்.


    வாங்கிப் பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் பணிபுரியும் அதே கம்பெனி.


       சார்! இது நான் வேலை செய்யும் கம்பெனி தான். கம்பெனி பஸ்சே வரும். நீங்க அதுலயே வந்துக்கலாம். வேலைக்கு நீங்க புதுசா? என்றாள்


     ஆமாம் மேடம். இன்னைக்குத் தான் ஜாயின் பண்ணப் போறேன் என்றவனிடம் அதோ நம்ம கம்பெனி பஸ் வருது. இன்னைக்கு நான் சொல்லிடறேன். உங்களுக்கு ஐ டி கார்டு கொடுத்த உடனே நீங்க தொடர்ந்து இதுல வந்துக்கலாம் என்றாள்.


     தேங்க்யூ என்று சொன்னவனைச் சிறு புன்னகையோடு அமோதித்தாள்.


        நாட்கள் கழிய நட்பு காதலானது. அவனுடைய குணம், பழகும் விதம் இவையெல்லாம் காதலை சிமெண்ட் அதிகம் சேர்த்த கான்கிரீட் கலவையாக பலப்படுத்தியது.


      அவள் எடுக்கும் ஒவ்வொரு மூச்சும் அவன் நினைவுகளையே உள்ளே கொண்டு சென்றது.


      அவளுடைய பிறந்தநாள் வந்தது. வாழ்த்துச் சொல்வான் என்று இரவு 12 மணி வரை விழித்திருந்தாள். போன் வரவே இல்லை மறந்திருப்பான் 

மறு நாளாவது பண்ணுவான் என்று எதிர்பார்த்தாள். பண்ணவில்லை.

மாலையில் வழக்கம்போல் சந்திக்க வந்தவனைக் கடும் கோபத்தில் வாயில் வந்த வார்த்தைகளால் திட்டினாள்.


       அறியாமையால் தன் தவறை உணர்ந்தவன் உண்மையிலேயே மிகவும் வருத்தப்பட்டான்.  

அவள் தன்னுடைய பிறந்தநாளுக்கு மட்டுமல்ல தன் குடும்பத்தில் எல்லாருடைய பிறந்தநாளுக்கும் அழகாக வாழ்த்துச் சொல்வாள்.


    தன் மீதே கோபம் வந்தது அவனுக்கு.

சே... எப்படி மறந்தோம்? என்ன இருந்தாலும் நமக்குச் சுயநலம் அதிகம் என்று தன்னையே நொந்து கொண்டான்.


    இருந்தாலும் அதற்குப் பிறகு தான் ஹோட்டலுக்கு அழைத்துப் போனதும் கடைக்குக் கூட்டிப் போய் புடவை எடுத்துக் கொடுத்ததும் தன் மேல் அவள் கொண்ட அன்பால் சகித்துக் கொண்டதும் அவனுக்குப் புரிந்தது.


      அளவு கடந்து அவள் காட்டும் அன்பால் பல நேரம் அவன் திக்கு முக்காடிப் போவான்.


     எதிர்பாராத சில நேரங்களில் அவனும் அன்பைக் காட்டத் தயங்கியதில்லை. 


        நினைவுகள் நேரத்தை மறக்கடிக்க பால்காரர் அடித்த சைக்கிள் பெல்லில் நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாள்.


       புறப்பட்டு ஹோட்டலுக்கு வந்து அவனுக்காகக் காத்திருந்தாள்.


   ஹாய் செல்வி!.... என்றபடியே வந்தவன் செல்வியின் முகத்தைப் பார்த்தான். அமைதியாக உட்கார்ந்து இருந்தாள். என்ன சாப்பிடறே செல்வி?

என்று கேட்டு அவள் சொன்னதை ஆர்டர் செய்தான்.


       சாப்பிட்டு முடித்தவுடன் பில்லைக் கொடுத்தாள் செல்வி. நிமிர்ந்து பார்த்தவனிடம் இன்னைக்கு என்னுடைய பிறந்தநாள் என்றாள். வழக்கம் போலவே தான் மறந்து விட்டது தோன்ற கன்னத்தில் அறை வாங்கியது போல நின்றான்.


     ஆனால் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது போன்ற விஷயங்கள் பல முறை நடந்த போது சத்தம் போட்டுத் தன் உரிமைக்காகப் போராடுவாள். இன்று அவள் காட்டிய அமைதி இவனுக்குப் பயத்தை உண்டு பண்ணியது.


      செல்வி..... வழக்கம்போல் தன் தவறினால் தலைகுனிந்தான். செல்வி நான் மறுபடி மறுபடி தப்பு பண்ணிட்டே இருக்கேன். ஆனா எப்பவும் உன்னுடைய உரிமையப் பேசுற நீ இன்னைக்கு ஏன் இவ்வளவு அமைதியா இருக்க?


   மென்மையாகப் புன்னகைத்தாள். விக்ரம்.... ஆரம்பத்துல உங்க அன்பு அதிகமா இருந்தது. செய்ய

வேண்டிய கடமைய மறப்பீங்க. அதனால

  ஞாபகப்படுத்தினேன். உங்க குடும்பச் சூழ்நிலையில என் மேல வெச்ச அன்பையும் விலக்க முடியாம தம்பி தங்ச்சிங்கன்னு குடும்பத்தையும் விட முடியாமத் தவிச்சு இவ அன்புக்கு நாம திருப்பிச் செய்யணும்னு கடமையைச் சரியாச் செஞ்சிடறீங்க. இப்பக் கூட பாருங்க பிறந்தநாள் புடவையை ஒரு மாசத்துக்கு முன்னாலேயே எடுத்துக் கொடுத்துட்டீங்க. ஆனா வாழ்த்துச் சொல்ல மறந்துட்டீங்க. ஞாபகம் வரும் போது வாங்கிக் கொடுக்கிற புடவையை விட பிறந்தநாள ஞாபகம் வச்சு சொல்ற வாழ்த்து எனக்கு ரொம்ப முக்கியம். 


அன்பு நிறைய இருக்கும்போது கடமையை ஞாபகப்படுத்தலாம். 

ஆனா கடமைய செஞ்சிட்டு அன்பா செய்ய வேண்டிய விஷயங்கள் குறைஞ்சா அதை நினைவுபடுத்தக் கூடாது. 


      கடமையைக் கேட்டு வாங்கலாம். ஆனா அன்பைக் கேட்டு வாங்கக் கூடாது என்று முடித்தாள்.


    அவள் வைத்த அன்பைப் போலவே பேச்சிலும் உண்மை இருந்தது. மனம் புரிந்து கொண்டதைக் கண்கள் காட்டியது. 


  இந்தப் பொக்கிஷத்தை விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியானான்.



-தமிழ்நிலா