பாவலர் கருமலைத்தமிழாழன்
அழகென்றல் உடலழகா
இல்லை இல்லை
அழுக்காறே இல்லாத
அகமே அழகு
அழகென்றால் ஒப்பனையால்
வருவ தன்று
அன்பாலே நிறைந்துள்ள
அகமே அழகு !
அழகென்றால் அணிகலன்கள்
தருவ தன்று
அம்மாவைப் போல்குழந்தை
அகமே அழகு
அழகென்றால் மினுமினுக்கும்
வெண்தோல் அன்று
அழுக்கில்லா பசும்பாலின்
அகமே அழகு !
துன்பத்தைத் தாராமல்
துயர்து டைத்துத்
துணையாக அணைக்கின்ற
கையே அழகு
இன்பத்தைக் காண்பதற்கே
இருள கற்றி
இடர்கடக்க வழிகாட்டும்
காலே அழகு !
புன்மைகளைச் செய்கின்ற
புளிக்கும் காயாய்ப்
புகல்கின்ற கசப்பான
சொல்லாய் இன்றி
இன்சுவையைத் தருகின்ற
கனிகள் போன்று
இயம்புகின்ற இனிமையான
சொல்லே அழகு !
அன்றலர்ந்த மலரழகு
ஆகா யத்தை
அலங்கரிக்கும் வட்டநிலா
முகில்கள் அழகு
நன்றாகச் செழித்திருக்கும்
காடு வெற்பு
நதியாகும் மலையருவி
இயற்கை அழகு !
வன்முறைகள் இல்லாமல்
உலகம் தன்னை
வளமுடனே வாழவைக்கும்
அமைதி அழகு
இன்றிவைகள் அழகெனினும்
மனித நேய
இதயமொன்றே பேரழகு
பெறுவோம் நாமே !