என் விவரம் தெரிந்த நாள் முதல் அவரை
நேருக்கு நேர் பார்த்தது இல்லை.
தொலைவில் வந்தாலே தூர போய் விடுவேன்.
என் திறமைகளை குறைகளை அவர்பார்க்க நான் அனுமதித்ததே இல்லை
என்னை அவர் பாராட்டினால் குற்றம். சொல்வேன்
குற்றம் சொன்னால் கோபம் கொள்வேன்.
எதிலும் அவரோடு முரன் பட்டே இருப்பேன்.
ஓரிரு வார்த்தைகள் அவ்வப்பொது பேச வேண்டி வரும்
அப்போதெல்லாம் நெருப்பையும் வெறுப்பையும் உமிழ்வேன்.
ஒரு கட்டத்தில் நான் பேசுவதையே நிறுத்திக்கொண்டேன்.
எங்களுக்குள் என்ன ஒவ்வாமை
கடைசி வரை தெரியவே இல்லை..
கடைசி வரை என நான் சொல்வது அவர் இறக்கும் வரை..
அவர் இல்லாமல் போனபின் தான் நிறைய தெரிந்து கொண்டேன்..
முக்கியமாக உறவுகளின் துரோகங்கள்
எல்லோரும் நடிப்பதை நான் நம்ப வேண்டியதில்லை என்ற
போக்கில் பலரது அலட்சியம் தெரிந்தது
அவர் தான் இல்லையே!
முன்பிருந்த மகிழ்ச்சி என்னிடம்
துளியும் இல்லை
சிலரது உதவிகள் கூட அவருக்காக என சொல்லியே செய்தார்கள்.
அவரின் அன்பினையும் குணத்தினையும்
பலரும் மகிழ்ச்சி பொங்க பாராட்டியபோது
அவர் அப்படிப்பட்டவரா? என நான் ஆச்சர்யப்பட்டேன்.!!
அவர் பற்றிய பல செய்திகள் எனக்கு புதிதாய் இருந்தது.
கடைசி வரை அவரிடம் விலகியே நான் இருந்தது ஏன்
என எனக்கு இன்னும் புரியவில்லை.!!!
இன்றும் பலரிடம் என்னை அடையாளப் படுத்திக்கொள்ள
அவர் பெயரை தான் சொல்கிறேன்.
இப்போதெல்லாம் அவரைப்பற்றி யாரேனும் பேசினால்
ஆர்வமாய் கேட்கிறேன்.
கொஞ்சம் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.
அவர் என் அப்பா..
--ஜனனி அந்தோணிராஜ்
திருச்சிராப்பள்ளி