tamilnadu epaper

இதயம்

இதயம்

பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் நிகில் மிகவும் துடிப்பானவர்.

 

 மிகவும் கைராசிக்காரர் எனப் பெயரெடுத்தவர்.

 

அவரை நம்பி வந்த இதய நோயாளிகள் யாரையும் அவர் கைவிட்டதில்லை.

 

எவ்வளவு சிக்கலான அறுவை சிகிச்சையாக இருந்தாலும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விடுவார்.

 

அவருடைய மருத்துவமனையில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.

 

அவருடைய மனைவியும் ஒரு மருத்துவர்.

 

மருத்துவத் தொழிலில் நிகிலுக்கு பக்கபலம் அவரே.

 

ஊரே கண்டு வியக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாய் பங்களா கட்டினார் நிகில்.

 

கிரஹப்பிரவேசத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  

 

தடபுடல் விருந்து வைத்து அசத்தினார் நிகில்.

 

மருத்துவத்துறையில் நிகிலின் சாதனைகளைக் கண்டு அனைத்து ஊடகங்களும் அவருடைய திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு சேர்த்தன.

 

புகழின் உச்சிக்குச் சென்றார் நிகில்.

 

இந்திய அளவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

 

அதில் பல துறைகளைச் சார்ந்த வித்தகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

பலரும் அவரைப் புகழ்ந்து தள்ள, இறுதியாகப் பேச எழுந்தார் இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ஒருவர்.

 

நிகிலின் மருத்துவச் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டினார்.

 

தனது உரையை முடிக்கும் சமயத்தில்,"டாக்டர் நிகிலின் மருத்துவச் சாதனைகளைக் கண்டு உலகே வியக்கிறது. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பிரபல இதய சிகிச்சை நிபுணர், இதயமே இல்லாமல் தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தது தான் இதயத்தைப் பிசைகிறது..." என்றார்.

 

தனது இதயத்தை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் உணர்ந்தார் டாக்டர் நிகில்.