tamilnadu epaper

உடலில் சேற்றை பூசி பக்தர்கள் நேர்த்தி கடன்

உடலில் சேற்றை பூசி   பக்தர்கள் நேர்த்தி கடன்


தூத்துக்குடி, மே 17 -


உடலில் களிமண் சேற்றை பூசி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சோழபுரம் கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு 108 இளநீர் மற்றும் 210 பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலம் வந்து 9 வகை அபிசேகங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.


திருவிழாவின் முக்கிய அம்சமாக சேற்று திருவிழா என்ற நிகழ்ச்சி நடந்தது.அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள் தங்களது உடல் முழுவதும் களிமண் சேற்றைப் பூசிக் கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். கிராமம் முழுவதும் சுற்றி இறுதியில் கோவிலை அடைந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் சேற்று திருவிழாவில் பங்கேற்று இசை வாத்தியங்களுக்கு ஏற்ப ஆட்டம், பாட்டத்துடன் கையில் வேப்பிலையுடன் சென்று நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் அந்த மண்ணில் உள்ள நுண் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும் என்பதும், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் நோய் ஏதும் வராது என்றும் சேற்றுத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.