tamilnadu epaper

எங்கள் ஊர் இளையான்குடி சிறப்புகள்

எங்கள் ஊர் இளையான்குடி சிறப்புகள்

எங்கள் ஊர் இளையான்குடி , சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.
மாவட்ட தலைநகரமான சிவகங்கையிலிருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும், மானாமதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடியில் அமைந்துள்ளது.
மிளகாய் விளைச்சலுக்கு பெயர் பெற்றது 

எங்கள் இளையான்குடி. 
திருச்சி காவிரி ஆற்றிலிருந்து ராமநாதபுரம் வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 55 ஊராட்சிகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும்,
இளையான்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இளையான்குடி தாலுகா குணப்பனேந்தல் கண்மாய்க்கான வரத்து கால்வாய் வைகை நாட்டார் கால்வாயில் இருந்து பிரிகிறது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,947 வீடுகளும், 24,774 மக்கள்தொகையும் கொண்டது. இது 21.64 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.


இப்பேரூராட்சி 63 நாயன்மார்களில் ஒருவரான மாறநாயனார் வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. 
இளையான்குடி, 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது எங்கள் ஊரின் சிறப்புகளில் ஒன்றாகும்.


இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளன.


பரமக்குடி வைகை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் கிணறுகள் அமைத்து மெய்யநேந்தல் கிராமத்தின் வழியாக தண்ணீர் இளையான்குடியை சென்றடையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 50-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.  

இளையான்குடி வட்டம் , சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக இளையான்குடி நகரம் உள்ளது. இவ்வட்டததில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.இந்த வட்டத்தின் கீழ் இளையான்குடி, சாலைகிராமம், சூராணம், தாயமங்கலம், திருவுடையார்புரம் என 5 உள்வட்டங்களும், 52 வருவாய் கிராமங்களும் உள்ளன.
இளையான்குடி வட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகு படி செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் கண்ணமங்கலம், நாக முகுந்தன்குடி, சூராணம் உள்ளிட்ட 19 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நெல் பயிரை காப்பீடு செய்கின்றனர்.


இளையான்குடி தனி தொகுதியாக இருந்தபோது, கடந்த 2011ல் தொகுதி சீரமைப்பின் போது மானாமதுரை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. 

63 நாயன்மார்களில் ஒருவரான வாரணாயனார் பிறந்த புண்ணிய பூமி எங்கள் இளையான்குடி ஆகும்.
இளையான்குடியில் பிறந்த மாறனார், உழவுத்தொழிலில் வந்த பெருஞ் செல்வமும், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் உடையவராய்த் திகழ்ந்தார். சிவனடியார் தம் இல்லத்திற்கு வந்தால், எதிரே சென்று கைகூப்பி வணங்கி, இனிய மொழிகளைக் கூறி வரவேற்று, அவர்களுக்கு உணவளிப்பார். நாள்தோறும் செய்த மாகேசுவரபூசை என்னும் சிவபுண்ணியத்தால், அவரது செல்வம், நாளுக்குநாள் பெருகிக் குபேரனைப் போன்ற பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்தார்
அடியார்க்குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்ய வல்லார் இந்நாயனார் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்த இறைவன் திருவுள்ளங் கொண்டார். இதனால் இளையான்குடி மாறனாரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கினாலும், தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து வந்தார்.
இவ்வாறு மாரிக்காலத்தில் ஒருநாள், தாம் உணவின்றிப் பசியால் வாடியபோதும், இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால், கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவுப் பொழுதிலே, சிவபெருமான், அடியார் கோலங்கொண்டு மாறனாரது மனைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத்தார். மாறனார் கதவைத் திறந்து, அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்று, இருத்தற்கு இடங் கொடுத்தார்; அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே என வருத்தம் மிகுந்தது. அன்றைய மழை நாளின் பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற்மணிகளைச் சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து, அடுப்பெரிக்க விறகில்லாமல், வீட்டின் சிதலமடைந்த கூரையிலிருந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்தி உணவு சமைத்து, மாறனாரும் அவரது துணைவியாரும், சிவனடியாருக்கு உணவு படைத்தனர். அப்பொழுது அடியாராக வந்திருந்த பெருமான், சோதிப் பிழம்பாய் எழுந்து தோன்றினார். அது கண்டு மாறனாரும் மனைவியும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியாருடன் எருதின் மேல் தோன்றி, "அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ, உன் மனைவியோடும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக" என்று அருள் செய்து மறைந்தருளினார். 

எங்கள் இளையான்குடியில் ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் சிவன் கோவில் அமைந்துள்ளது இது தேவார வைப்புத்தலமாகும்.
மதுரை-இராமநாதபுரம் சாலையில், பரமக்குடியை அடுத்து காரைக்குடி சாலையில், எமனேஸ்வரம், குமாரக்குறிச்சி, திருவுடையார்புரம் ஆகிய ஊர்களை அடுத்து இளையான்குடி அமைந்துள்ளது. அப்பகுதியில் இக்கோயில் உள்ளது
இத்தலத்தில் மாறநாயனாருக்குச் சன்னதி உள்ளது. இக்கோயிலில் அவர் ’பசிப்பிணி மருத்துவர்’ என்று வழங்கப்படுகிறார். கோயிலுக்குச் சற்று தூரத்தில் இவர் வாழ்ந்த வீடும் பயிர் செய்த நிலமும் அமைந்துள்ளன. இவர் பயிர் செய்த நிலம் "முளைவாரி அமுதளித்த நாற்றாங்கால்" என்றழைக்கப்படுகின்றது. இவரது குருபூஜை நாளன்று இத்தலத்து இறைவனாருக்கு தண்டுக்கீரை படைக்கப்படுகிறது. 

மேலும் எங்கள் ஊரில் வாள்மேல் நடந்த அம்மன் கோயில் உள்ளது.இக்கோயிலில் வாள்மேல் நடந்த அம்மன் சன்னதியும், விநாயகர், பாலதண்டாயுதபாணி, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன.இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் விஜயதசமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. 

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான வரகுனேஸ்வரர்- திருக்காமகோடீஸ்வரி கோயில் உள்ளது.