எங்கள் ஊர் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டம் மற்றும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். “ இப்பகுதி சோழர்கள் ஆட்சி காலத்தில் நீராடுமங்கலம் என்ற பெயருடன் விளங்கியுள்ளது. நீடாமங்கலம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
நீடாமங்கலம் பேரூராட்சி, திருவாரூருக்கு 27 கிமீ தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் தஞ்சாவூர் 32 கிமீ; கும்பகோணம் 26 கிமீ; மன்னார்குடி 12 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி முற்காலத்தில் சோழநாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.
2.62 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
சங்ககாலத்தில் இந்த ஊர் நீடூர் என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது மிழலை நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.சோழர்கள் காலகட்டத்தில் இந்த நகரம் நீராடுமங்கலம் என்ற பெயருடன் விளங்கி வந்துள்ளது. சோழர்கள் காலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் மற்றும் இளவரசிகள் இந்த ஊரில் புனித நீராடுவதனால் இவ்வூருக்கு நீராடுமங்கலம் என்ற பெயர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நீடாமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும்.இந்த வட்டத்தின் தலைமையகமாக நீடாமங்கலம் நகரம் உள்ளது.2016ல் நீடாமங்கலம் வட்டத்தின் 55 வருவாய் கிராமங்களைக் கொண்டு கூத்தாநல்லூர் வட்டம் நிறுவப்பட்டது
தற்போது நீடாமங்கலம் வட்டத்தின் கீழ் 51 வருவாய் கிராமங்கள் உள்ளன
இவ்வட்டத்தில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நீடாமங்கலம் கோகமுகேஷ்வரர் கோயில் மற்றும் நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில் உள்ளது.
நீடாமங்கலம் தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து ஆகும். நீடாமங்கலம் முதலில் 1997 AD வரை பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில், இது யமுனாம்பாள்புரம் என்றும் அழைக்கப்பட்டது.
நீடாமங்கலம் தாலுக்கா வடக்கே வெண்ணாறும், தெற்கில் கோரயாறு ஆறும் கடக்கிறது. வங்காள விரிகுடாவிற்கு அருகில், வெண்ணர் ஆறு மூன்று பெரிய விநியோக நிலையங்களாகப் பிரிகிறது, வடக்கு கிளை அதன் அசல் பெயரான வெண்னாறு. மற்ற இரண்டு கிளைகள் பாமினியாறு மற்றும் கோரையாறு ஆகும்.
நீடாமங்கலம் தாலுகாவில் பெரும்பாலோர் விவசாயிகள். மேலும் இந்த தாலுகாவில் சேர்ந்த பலர் இப்போது வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள்.
திருவாரூர், நாகை மாவட்டங்களின் பாசனத்துக்காக நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுகிறது. இங்கிருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமினி ஆகிய 3 ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப்படுகிறது.நீடாமங்கலம் பேரூராட்சி யமுனாம்பாள்புரம் என்பது மராட்டிய மன்னர் தஞ்சாவூரை ஆட்சி செய்த பிரதாபசிம்ம மகாராஜாவின் மனைவி யமுனாம்பாள் பெயரால் அமைக்கப்பட்டது. இதற்கு அரண்மனையும் உள்ளது. அதில் தற்போது கல்வி நிலையங்கள் நடந்து வருகிறது. மேற்கண்ட மன்னர் தானமாக சத்திரங்களையும் சர்வமான்ற அக்ரஹாரம் உள்ளடச்சிய சந்தான ராமசாமி கோயில் மற்றும் சிவன் கோவில் கட்டி அழகு பார்த்தார்.கோயிலைக் கட்டிய மன்னர், கோயிலின் எதிரில் அழகிய திருக்குளம் ஒன்றை அமைத்து பக்தர்களும், ஊர் மக்களும் நீராட வசதி செய்து தந்தார். இந்த திருக்குளத்தில் ஆடிப்பூர தெப்ப உத்ஸவம், முன்னொரு காலத்தில் விமரிசையாக நடத்தப்பட்டு வந்தது.
நீடாமங்கலம் பேரூராட்சி ஊரிலிருந்து 7.கி.மீ. துரத்தில் அருள்மிகு குருபகவான் சாமியின் திருத்தலம் அமைந்துள்ள ஆலங்குடி உள்ளது. ஒன்பது நவகிரகங்களில் முக்கியமான ஒன்றான குரு திருத்தலமாகும். இத்தளத்தில் குரு பெயர்ச்சி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நீடாமங்கலம் அருகில் சாமுண்டீஸ்வரி கோவிலும் அதற்கடுத்தாக ஒன்பது நவகிரகங்களில் ஒன்றான குரு ஆலங்குடி கோவிலும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் 32 கி.மீ. துரத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இது சுற்றுலா ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி முதல் ஞாயிறு –கடைசி ஞாயிற வரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவே நீடாமங்கலம் பேரூராட்சியின் சிறப்பம்சமாகும்.
எங்கள் நீடாமங்கலத்தில் உள்ள கோகமுகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கோகமுகேஷ்வரர், பாலாம்பிகை சன்னதிகளும், விநாயகர் முருகன் கிருஷ்ணர் ரெங்கநாதர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவன்ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
குழந்தை இல்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அருளும் வைணவ கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நீங்கா புகழுடன்விளங்குவது
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவில்.
மூலஸ்தானத்தில் சந்தானராமசுவாமி, சீதை, லெட்சுமணர், அனுமார், சயன சந்தான கோபாலன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். விமானத்துக்கு வெளியில் தெற்கில் தும்பிக்கையாழ்வார், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் உள்ளனர். கோவிலுக்குள் 2 பிரகாரங்களும், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளது.
கோவிலில் அனுமனுக்கு தனி சன்னதி உள்ளது. இதற்கு காரணம் சந்தானராமசுவாமி குழந்தை பாக்கியம் அருளுவதாலும், ராம பக்தர்களுக்கு அனுமானே குரு என்பதாலும் இங்கு அனுமன் பரமபாகவத அனுமான், தாச அனுமான், சத்குரு அனுமான் என்ற பாவத்தில் தனி சன்னதியில் உள்ளார் ஸ்ரீராமர் சன்னதிக்கு செல்லும் முன்பு சத்குரு அனுமான் வணக்கத்துடன் செல்வது எந்த ராமர் கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.
ராமநவமி உற்சவம்(பங்குனியில்), ஆடிப் பூரத்தில் தெப்ப உற்சவம், ஆவணியில் பவித்ர உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி, மார்கழியில் அத்யயான உற்சவம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
மேலும் எங்கள் நீடாமங்கலத்தில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலும் உள்ளது.
இக்கோயிலில் ஸ்ரீ லெட்சுமிநாராயண பெருமாள் சன்னதியும், ஆண்டாள், செங்கமலதாயார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் அட்சயதிருதியை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.
நீடாமங்கலத்தைக் கடந்து தினமும் 14 எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் மற்றும் 4 வாராந்திர ரயில்கள், 5 சரக்கு ரயில்கள் செல்கின்றன.நீடாமங்கலம் ரயில்வே கேட்டை கடந்து காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், மைசூர் விரைவு ரயில், அதேபோன்று காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில், 20 சரக்கு ரயில் என நாள்தோறும் சுமார் 42 ரயில்கள் செல்கின்றன.
இங்கு சரக்கு ரயிலில் உர மூட்டைகள் வரும் போதும், இங்கிருந்து பிற இடங்களுக்கு நெல் மூட்டைகள் ஏற்றும் போதும், சரக்கு ரயிலின் வேகன்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டு, பணிகள் முடிந்த பிறகு வேகன்கள் இணைக்கப் பட்டு ரயில் புறப்படும்.
நீடாமங்கலம் சந்திப்பு ரயில் நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி தொடருந்து பிரிவின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த நகரத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைக்கிறது.இந்த நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம், தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, நாகப்பட்டினம் சந்திப்பு, காரைக்கால் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, இராமேசுவரம் போன்ற இடங்களை இணைக்கிறது.
குட்டி முத்துச்செல்வம் சிவகாமிபுரம்