சென்னை பாரீஸ் கார்னர்.. சென்னையின் பழமையான அடையாளங்களில் முக்கியமான ஒன்று….
1788-ல் சென்னை வந்த இங்கிலாந்தின் தாமஸ் பாரி, வணிகராக உரிமம் பெற்று தொழிலை ஆரம்பித்தார். 1795ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’வாக உருவானது. 1819-ல் ஜான் வில்லியம் டேர் என்பவருடன் இணைய ‘பாரி அண்ட் டேர்’ நிறுவனமாக மாறியது.
1824ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாரி மரணமடைகிறார். இவருடைய வணிக பங்குதாரர் டேர் தலைமையில் பாரி நிறுவனம் வளர ஆரம்பித்த பிறகு, ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரி (EID) அண்ட் சுகர் ஃபேக்டரி’ உருவானது. 1939ல் டேர் ஹவுஸ், ‘ஆர்ட் டிகோ’ என்ற கட்டட பாணியில் உருவாக்கப்பட்டது. அன்று தாமஸ் நிறுவிய வணிகக் கட்டடம் இன்று, ‘ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிட்’ என அழைக்கப்படுகிறது.
அந்தக் கட்டடம் இருக்கும் வரிசையில், நூற்றுக்கணக்கான கடைகள், பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்கள், வீடற்ற – முகவரியற்ற மக்களுக்கு நிரந்தர முகவரியாக இருக்கும் அந்த இடம் தான் பாரீஸ் கார்னர்.
மெட்ராஸ் நகரத்தின் முதல் குடியேற்றம் கோட்டைக்கு அருகில் இங்கே தொடங்கியது.
இப்பகுதியில் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்று கட்டப்பட்டதன் மூலம், ஆங்கிலேயர்களுக்கு மெட்ராஸ் ஒரு முக்கியமான கடற்படை தளமாக மாறியது.
1733 ஆம் ஆண்டில், திருவொற்றியூர் அருகே உள்ள சிந்தாதிரிப்பேட்டை மற்றும் கொள்ளேப்பேட்டையில் நெசவுத் தொழிலாளிகள் குடியேறத் தொடங்கினர் , ஏனெனில் நெசவு செய்வதற்கு ஏராளமான திறந்தவெளி இடம் கிடைத்தது
சலவைத் தொழிலாளர்கள் வண்ணாரப்பேட்டையை உருவாக்கினர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த குயவர்கள் கோட்டைக்கு வெளியே வடக்குப் பகுதியில் இடம்பெயர்ந்து கொசப்பேட்டை என்ற புதிய காலனியை உருவாக்கினர்.
எழும்பூரை இணைக்க 1710 இல் ஒரு பாலம் கட்டப்பட்டதன் மூலம் , மக்கள் தற்போதைய மூர் மார்க்கெட் பகுதியை நோக்கி நகரத் தொடங்கினர்.
இவ்வாறாக கொஞ்சம் கொஞ்சமாக பாரிஸ் கார்னரில் தெருக்கள் முளைக்க ஆரம்பித்தன. தற்போது 20க்கும் மேற்பட்ட ஷாப்பிங் தெருக்கள் மக்களை ஈர்க்கின்றன.
மலிவு விலையில் எளிதாக ஷாப்பிங் செய்வதற்கு (மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ) பாரிஸ் கார்னரில் உள்ள முக்கியமான தெருக்கள்....
மண்ணடித் தெரு: ஜவுளிகள் மற்றும் இறக்குமதி பொருட்கள்
மூர் தெரு: தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்
அங்கப்ப நாய்க்கன் தெரு: இந்த தெரு ஜவுளி மற்றும் உணவகங்களுக்கு பெயர் பெற்றது.
குடோன் தெரு: ஜவுளிகள்
லிங்கி செட்டி தெரு: ஸ்டீல் ஹார்டுவேர், எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் பம்ப் செட்கள்
தம்பு செட்டி தெரு: ஹார்டுவேர், செராமிக் டைல்ஸ் மற்றும் சானிட்டரி வேர்
பிராட்வே: சைக்கிள்கள், ஆப்டிகல் பொருட்கள், இயந்திர கருவிகள், எடை இயந்திரங்கள், கட்டுமான சீருடைகள், தீயணைப்பு உபகரணங்கள்.
ஆண்டர்சன் ஸ்ட்ரீட்: காகிதப் பலகை, அச்சிடும் காகிதங்கள், டைரிகள், நோட்புக் பைண்டிங் , திருமண பத்திரிக்கை போன்ற அனைத்து காகிதத் தயாரிப்புகள் .
கோவிந்தப்ப நாய்க்கன் தெரு: மின்சாதனப் பொருட்கள், உலர் பழங்கள் கிடைக்கும், அகர்வால் பவன் சமோசா, பாசுந்தி, ரஸ்மலாய் ஆகியவை புகழ்பெற்றவை.
நைனியப்ப நாய்க்கன் தெரு: இரசாயனங்கள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள்.
காசி செட்டி தெரு: பேனாக்கள் மற்றும் நினைவு பொருட்கள், பரிசு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை.
பண்டர் தெரு: புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் பட்டாசுகள், செயற்கை பூக்கள், அரசியல் கொடிகள் சுவரொட்டி போன்றவை
தேவராஜ முதலி தெரு: கண்ணாடிப் பொருட்கள் மற்றும் போட்டோபிரேமிங், வன்பொருள்கள், வண்ணங்கள், சாயங்கள் மற்றும் இரசாயனங்கள்.
மின்ட் ஸ்ட்ரீட் : சல்வார்கள், டிசைனர் புடவைகள், ஸ்டீல் பொருட்கள், நகைக் கடைகள், ஜெயின் கோவில்கள், உணவகங்கள்.
பெருமாள் முதலி தெரு: கலை வளையல்கள், கண்ணாடி வளையல்கள், பிளாஸ்டிக் வளையல்கள் மற்றும் அனைத்து வகையான வளையல்கள்.
அண்ணா பிள்ளை தெரு: ஹல்தி (மஞ்சள்), குங்குமம், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற பூஜை பொருட்களுக்கு மொத்த விற்பனை
பர்மா பஜார்: எலக்ட்ரானிக் பொருட்கள், கேமராக்கள், லக்கேஜ்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்கள்.
கீதா ராஜா சென்னை