பூமி என்ற கிரகத்தில், டியூனஸ்" />
" இன்னும் சற்றுநேரத்தில் பூமியில் இறங்கப்போகிறோம் " என்ற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளினர், டியூனஸ் கிரக விஞ்ஞானிகள்!
பூமி என்ற கிரகத்தில், டியூனஸ் போலவே உயிரினங்கள் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்ததும், ஒளியாண்டுகள் வேகத்தில் செல்லும் தங்களது விண்கலத்தை சில விஞ்ஞானிகளுடன் பூமிக்கு அனுப்பிவைத்திருந்தனர்!
" பூமியை நெருங்குகிறோம், இங்கு எல்லாமே நம்மைவிட மெதுவாக நகர்வதாகத் தெரிகிறது! "
" அவசரப்பட வேண்டாம். ஆபத்தில்லாத இடமாகப் பார்த்து விண்கலத்தை இறக்கவும், ஜாக்கிரதை! "
பூமியில்...
கரண்ட் கட்டானதால் தொப்பலாக வியர்வையில் நனைந்த குமார், தூக்கம் கலைந்து எழுந்தான். தலையணையையும், கொசு பேட்டையும் எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு நடந்தான்.
டியூனஸ் கிரக விண்வெளி நிலைய ஸ்பீக்கரில்...
" இறங்குவதற்குத் தோதான இடம் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டோம், இதோ இறங்குகிறோம்! "
குமார் காதருகே கொசுக்கள் ரீங்காரமிட, கொசு பேட்டை ஆன் செய்து சுழற்றினான்!
" ஹலோ... ஹலோ... நமது வருகையைத் தெரிந்துகொண்ட பூமி வாசிகள், நமது விண்கலம் அளவுக்கு இருக்கும் அவர்களது ஊர்திகளில் வந்து தாக்குகிறார்கள்! அத்துடன் ராட்சத மின் வலையையும் வீசுகிறார்கள். நாங்கள் தப்பிப்பதற்கு... கொர்ர்ர்ர்ர் "
குமார் வீசிய பேட்டில், கொசுக்களுடன் சேர்ந்து விண்கலமும் சிக்கி கருகிப்போனது!
- திருப்பூர் சாரதி