குதிரை குதிரை குதிரை
வேகமாய் ஓடும் குதிரை
படையில் உள்ள குதிரை
சண்டை போடும் குதிரை
அடிக்கடி நாம் பார்க்கும்
அழகான குதிரை அது.
நானும் பார்த்தேன் ஒரு குதிரையை
தரையில் அல்ல தண்ணீரில்
அது நல்ல தண்ணீரும் அல்ல
உப்பான கடல் நீரில் வாழும்
அதிசயமான கடற்குதிரை
நான் வியந்த கடற்குதிரை.
மீனின் ஒரு வகையது
முகமோ குதிரை போன்றது
எந்த மீனும் இதனையே
உணவுக்காக தின்னாததால்
பயமின்றி வாழும் கடலிலே
அதிசயமான கடற்குதிரை.
அதிசயமான தன்மையொன்று
கடற்குதிரைக்கு உள்ளது
ஆண் குதிரையின் வயிற்றிலுள்ள
பையில் முட்டையிடும் பெண்குதிரை
குஞ்சுகள் வரும்வரை முட்டையை
கவனமாய் காத்திடுமே ஆண் குதிரை.
தடை செய்யப்பட்ட கடலுயிரில்
கடற்குதிரைக்கு இடமுண்டு
மருந்துக்காக மனிதனுமே
இதனைப் பிடித்து விற்பதால்
கடல் வளத்தை் காக்கவே
உறுதி எடுப்போம் நாமுமே.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.