ஆசிரியர் : வி. பிரபாவதி
பதிப்பகம் : புஸ்தகா
விலை : ரூ 80
திருமதி வி.பிரபாவதி எழுதும் ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு முறையில் புதுமையாக இருக்கும் என்பது நிச்சயம். அதே போல் இந்த புத்தகத்தில் சுட்டெரிக்கும் கோடையை வென்று குளிர்ச்சி பெற பல நூதன பானங்களை பற்றியும் அவைகளை எவ்வாறு சுவைபட செய்யலாம் என்பதை பற்றியும் அருமையாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு பானத்தின் விளக்கமும் நம்மை அசத்துகின்றது.
முதல் பானமாக அவர் விளக்கியுள்ள நெல்லிக்காய் ஜூஸ் செய்முறை வெகு சுலபமாக ஒன்றாக இருக்கிறது. அதில் உபயோகப் படும் அனைத்து பொருட்களும் எளிதாக கிடைப்பவை. நமது உடல் உஷ்ணத்தை நன்றாக குறைக்கும் தன்மை கொண்டது நெல்லிக்காய். நெல்லிக்காயின் சக்கையை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அவரது ஒர் வரி எதையும் வீணாக்கக் கூடாது என்னும் அவரது எண்ணத்தின் பிரதிபலிப்பாக நான் பார்க்கிறேன்.
அவர் விவரித்துள்ள கோதுமை கஞ்சி காலை சிற்றுண்டியாகவும் பயன் படும் ஒன்று. குழந்தைகள் பெரியவர்கள் இரு சாரரும் அருந்தக் கூடியது. பெரியவர்கள் பாதி பேர் சக்கரை நோயால் அவதிப் படும்போது இந்த பானம் சக்கரை நோய்க்கு உகந்த ஆகாரம் என்று கூறியிருப்பது வரவேற்கத் தக்கது.
அவரது பழைய அமுதம் எனது ஃபேவரட் பானமாகி விட்டது. இது வரை இரண்டு மூன்று முறைகள் செய்து எங்கள் வீட்டில் சுவைத்தும் விட்டோம். அவர் கூறுவது போல் வயிரும் குளிர்ந்தது, நாக்கும் ரசித்தது, உடலின் உஷ்ணமும் நன்றாக இறங்கியது.
சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு, சீரகம் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய்யையும் கலந்து குடிக்குமாறு விளக்கியுள்ளார். வயிற்று புண்கள் காணாமல் போய் விடுமாம், சத்தானதும் கூடவாம். சிறு குழந்தைகளுக்கு ஊட்டினால் சாப்பிட்டு பசியாறி நன்றாக தூங்குவார்களாம். இதை படித்தவுடன் எனக்கு என் பாட்டியின் நினைவுதான் வந்தது. இப்படி சமையல் செய்துதானே நம்மை பெரியவர்கள் சத்தாக வளர்த்தார்கள்.
பானகம் என்பதை விரும்பி அருந்தாதவர்கள் வெகு சிலரே. இவர் விளக்கும் செய்முறையும் வெகு எளிதாக உள்ளது. ஸ்ரீராமருக்கும் அம்பாளுக்கும் உகந்த நைவேத்யம் என்று வேறு கூறி விட்டார். விடுவோமா……. வாங்கள் நாமும் போய் பானகம் தயார் செய்து தெய்வத்திற்கு நைவேத்யம் செய்து சுவைத்து மகிழ்வோம்.
நான் இங்கு குறிப்பிட்டவை அவரது ஐந்து பானங்களைதான். இதே போல் விதவிதமாக 18 பானங்களின் செய்முறைகளை எளிதாக விளக்கி நமக்கு இப்புத்தகத்தை அளித்துள்ளார்.
திருமதி வி. பிரபாவதி ஐம்பதிற்கும் மேலான சிறு கதைகள் எழுதியுள்ளார். அவர் ஒரு நேர்த்தியான எழுத்தாளர்.
இதை தவிர அவர் Prabas’s ISP என்னும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் பல ஆன்மீக விஷயங்களை பகிர்ந்து வருகிறார். நீங்கள் யாவரும் அந்த சேனலை பார்த்து பல நல்ல விஷயங்களை அறிந்து பயனடையலாம்.
இந்த கோடைக்கேற்ற ‘கொடை’ ஒரு மிக உபயோகமான புத்தகமாக அமைந்துள்ளது. நீங்களும் வாங்கி பானங்களை செய்து பருகி பயனடையுங்கள்.
-ரமா ஸ்ரீனிவாசன்