பிரம்மாண்டமான கல்யாண ரிசப்ஷனில் ஆரம்பிக்கிறது கதை. மூன்று வருடம் காதலித்துப் போராடிக் கல்யாணம் கூடிவரும் வேளையில் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி ஆணையிடுகிறார் ஒரு மூதாட்டி.
அதற்கான காரணத்தை அவர் சொல்ல ஆரம்பிக்கும்போது மூன்று தலைமுறை பின்னோக்கிப் பயணிக்கிறது கதை. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள வேணுவனம் என்னும் ஜமீன் பங்களாவின் பழமையையும், செழுமையையும், வீரத்தைப் பறைசாற்றும் அலங்காரப் பொருட்களையும் கண்முன்னே நிறுத்துகிறார் ஆசிரியர். தாமிரபரணி வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆற்றோரம் குடியிருக்கும் எளிய மனிதர்களுக்காகக் கோவில் கொடைக்கென்று சேர்த்து வைத்திருக்கும் தானியங்களையும் பணத்தையும் செலவிடும் சின்னப்பண்ணை ரத்தினம்பிள்ளையின் ஈர மனசால் வானளவு உயர்ந்து நிற்கிறார். சொத்து அதீதமாக இருந்தாலே ஆபத்து தானே?
பண்ணையாரின் மனைவி படுத்த படுக்கையாகக் கிடக்கும்போது உதவிக்கு வரும் மகள் வயதுப்பெண் மீது அவர் மோகம் கொள்வதால் விபரீதம் ஆரம்பிக்கிறது. அவரது மூத்த தாரத்தின் மகன் தன் சித்தி குடும்பத்தை வன்மத்துடன் பழிவாங்கத் துடிப்பது தான் கதையின் மையப்புள்ளி. கதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்ந்த சிற்பி செதுக்குவது போல் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார். இந்தக்கதை படிக்கும்போது ஒவ்வொரு காட்சியும் திரைப்படம் பார்ப்பதுபோல் மனதில் விரிகிறது. இதற்குக் காரணம் புத்தகத்தைக் கையில் எடுத்ததும் நம்மை வேணுவனத்திற்குள் கைப்பிடித்து அழைத்துப்போய் நடுக்கூடத்தில் உட்கார வைத்து விடுகிறார். படித்து முடிக்கும்வரை டைம் மெஷினில் உட்கார்ந்த மாதிரி அந்தக் காலகட்டத்திற்கே சென்று விடுகிறோம்.
சூழ்ச்சிக்கே சூழ்ச்சி செய்து எதிர்பாராத ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய கல்யாணி அம்மா கதாபாத்திரம் ரத்தினம்பிள்ளையை விட உயர்ந்து விஸ்வரூபம் காட்டுகிறார்.
பண்ணையாரின் மூத்த மகன் குரு கதாபாத்திரம் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் குரூரம் கலந்து படைக்கப்பட்டுள்ளது. இரண்டு கதாபாத்திரங்களுக்குமிடையே குணத்தில் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு காணப்படுவதால் தான் கதையின் விறுவிறுப்பு கூடுகிறது.
ஆற்றோரம் அமைந்துள்ள ஒரு கிராமம், அவர்களின் இறை நம்பிக்கை, வெள்ளந்தி மனிதர்களின் ஒற்றுமை, முதலாளியின் மேலுள்ள விசுவாசம் எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அந்த முதலாளியோ தன்னைச் சார்ந்துள்ள எளியவர்களை தெய்வத்துக்கும் மேலாகப் போற்றும் பெருங்கருணை மனதை நினைக்கிறது.
-வசந்தா கோவிந்தராஜன்