வேலூர், ஏப். 27-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், உள்ளி மதுரா கம்மவார் பட்டி கிராமத்தில் பைரவி அம்மன் சமேத ஸ்ரீ காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இது சுமார் கால் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் ஸ்ரீ காலபைரவர் பைரவி சமேதரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஸ்ரீ காலபைரவர் சமேத ஸ்ரீ பைரவி திருக்கல்யாணமும், திருவீதி உலாவும் சித்திரையில் நடைபெறும். இந்த ஸ்ரீ காலபைரவர் ஆலயமானது ஸ்ரீ மஹா காளியம்மன் ஆலய சித்தர் பீடமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தை நிறுவி ஸ்ரீ மஹா சித்தர் லோகநாத சுவாமிகள் பராமரித்து பூஜைகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீ காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அதாவது சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ மஹா சித்தர் லோகநாத சுவாமிகள் செய்திருந்தார். திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காலபைரவரை தரிசனம் செய்தனர். இந்த ஆலயத்தில் மட்டுமே பைரவி அம்மன் சமேதரராக ஸ்ரீ கால பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.