tamilnadu epaper

சுதந்திர தாகம் > விடுதலை

சுதந்திர தாகம் > விடுதலை

தன் மாமியார் மரித்த செய்தியை மனைவி போனில் சொன்னதும் பதறிப் போனார் குமார். உடனே வந்த வேலையை உதறி விட்டு வீட்டுக்குத் திரும்ப யத்தனித்தார்.

 

அப்பா இறந்ததும், தனியே இருக்கும் தன் அம்மாவை நம்ம கூடவே வெச்சுக்கலாமென மனைவி கோரியபோது குமாரால் மறுக்க முடியவில்லை

 

சமையல் அறையில் மாமியாரின் பங்களிப்பு அதிகம். டிபன் ரகங்களோ அதிகம். சுவையோ அபாரம். மனைவியின் சமையலைக் காட்டிலும் மாமியாரின் கைப்பக்குவம் தூக்கல். குமாருக்கு இது மனநிறைவை அளித்தது.

 

குமார் ஆபீஸ் செல்ல, குழந்தைகள் பள்ளிக்குப் புறப்பட பெரும் உதவியாய்

இருந்தார். முறை வாசலுக்கு மட்டுமே பணிப்பெண்.

 

சொந்த வீடு, டூ வீலர், கார் என சகல சம்பத்துக்களும் இணைந்தன..குமாரின் வாரிசுகளுக்கும் திருமணம் முடிந்து குழந்தைகளும் பிறந்தன..இருபத்தைந்து வருடங்களில் குறை என்பதே தெரியவில்லை.

 

ஒரு நாள் குழம்பில் உப்பு தூக்கலாயிருந்தது..பிறிதொரு நாளில் காரம் அதிகம். சில வேளைகளில் சாம்பார் தூக்கு மாமியார் கை தவறி கீழே விழுந்து விடும்.

 

மூப்பின் காரணமாய் மறதி, தளர்வு இவ்விதம் ஆகிறதென முடிவெடுத்து சமையல் கட்டிலிருந்து அவர்களை விடுவித்தோம்.

 .

இது மாமியாருக்கு அறவே பிடிக்கவில்லை. தன் பதவி பறி போன விரக்தி. வாய் விட்டும் பகிரவில்லை.

 

’வழக்கமாய் எடுத்துக் கொள்ளும் BP மற்றும் சுகர் மாத்திரையைப் போடாமல் தவிர்த்து விட்டிருக்கிறார்.. அதனாலே இது நிகழ்ந்திருக்கிறது’ என்றார் பரிசோதித்த மருத்துவ நிபுணர் காந்திராஜ்.

 

தன்னை மூலையில் முடக்க முயற்சிக்கும் என் உறவுகளிடமிருந்து விடுதலை வேண்டுமென்று எண்ணியிருக்கலாம். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் முயற்சியில் தன் இறுதி மூச்சை பணயம் வைத்து விட்டாரோ?

 

மாமியார் வயது முதிர்ச்சியில் இவ்விதம் நடந்து கொள்வார்களென குமார் புத்திக்கு இதுவரை எட்டவில்லை. 

 

-பி. திலகவதி, சென்னை.