சென்னை, மார்ச் 31
சென்னையில் நடைபெறும் சர்வதேச அளவிலான கால்பந்து உச்சிமாநாட்டையொட்டி, நேரு உள்விளையாட்டரங்கில் கால்பந்து கண்காட்சிப் போட்டி நடைபெற்றது.
இதில், 2002-இல் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி வீரர்கள், ஜாம்பவான் ரொனால்டினோ தலைமையில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணியாகவும், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், விஜய் நடித்து பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தவருமான ஐஎம்.விஜயன் தலைமையில் முன்னாள் வீரர்கள் அடங்கிய இந்தியா ஆல் ஸ்டார் அணியும் விளையாடின.
உலகப் புகழ் பெற்ற வீரர்கள்
கால்பந்து என்றாலே ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் பிரேசில் அணியின் உலகப்புகழ் பெற்ற வீரர்களான ரொனால்டினோ, ரிவால்டோ, கில்பர்டோ சில்வா உள்ளிட்டோர் சென்னை வருகின்றனர் என்றதுமே கால்பந்து ரசிகர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது. இதனால், போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி போட்டியை தொடங்கி வைத்தார்.
மொத்தம் 70 நிமிடம் போட்டி நடந்தது. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 43வது நிமிடத்தில் பிரேசிலின் வயோலா ஒரு கோல் அடித்தார். இதற்கு, அடுத்த நிமிடத்தில் இந்தியாவின் பிபியானோ பெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின், 64வது நிமிடத்தில் பிரேசிலின் ரிக்கார்டோ ஒலிவேரா ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றுத்தந்தார். தொடர்ந்து போராடிய இந்திய வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2- 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முதலமைச்சர் மகிழ்ச்சி
ஒரு மாபெரும் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் கால்பந்து போட்டி நடைபெற்றது பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "நேற்று இரவு தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது. பிரேசில் லெஜெண்ட்ஸ் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு போட்டி என்பதைத் தாண்டி, எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது. வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையிலான ஒன்று.குழந்தைகளே, கடினமாகப் படியுங்கள், தைரியமாக விளையாடுங்கள், நியாயமாக வெற்றி பெறுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.