என்னடா.. செல்லம்.. காச திருப்பி திருப்பி எண்ணிகிட்டே இருக்க... இன்னும் அதுக்கு 1500 ரூபாய் வேணும் அப்பதான் அந்த பொம்மையை வாங்க முடியும்னு உனக்கு தெரியாதா?" />
tamilnadu epaper

சேமிப்பு

சேமிப்பு

 - திருமாமகள்


 "என்னடா.. செல்லம்.. காச திருப்பி திருப்பி எண்ணிகிட்டே இருக்க... இன்னும் அதுக்கு 1500 ரூபாய் வேணும் அப்பதான் அந்த பொம்மையை வாங்க முடியும்னு உனக்கு தெரியாதா? நீ எத்தனை வாட்டி எண்ணினாலும் அவ்வளவுதான் இருக்கும்.. காசு எல்லாம் குட்டி போடாது" குறும்பாய் சொன்ன தன் அப்பா பாஸ்கரைப் பார்த்தாள் நேகா.


 "அப்பா.. என் பிறந்தநாளுக்கு இன்னும் ரெண்டு நாள் தான் பா இருக்கு அதுக்குள்ள எப்படிப்பா அந்த காசு சேர்க்க முடியும்.." கொஞ்சமாக கண்ணில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டது நேகா.


" இங்க பாரு உனக்கு அப்பாவ பத்தி தெரியும் இந்த மாசம் எவ்வளவு செலவு பாத்தியா.. திடீர்னு தம்பி பாப்பாவுக்கு உடம்பு சரியில்ல இல்லையா? அதனால உனக்கு போட வேண்டிய 1500 ரூபாய்க்கு மேலவே மருந்துக்கு போயிடுச்சு.. " என்ன சொல்லியும் சமாதானம் ஆகவில்லை நேகா.


 பார்த்துக் கொண்டிருந்த நேகாவின் அம்மா அவள் அருகில் வந்தாள்.


" என்ன நேகா இது புது பழக்கம் பொம்மைய கொண்டா அதைக் கொண்டா இதை கொண்டா.. னு இதெல்லாம் யாரு சொல்லிக் கொடுத்தது.. "


" அம்மா என் ஃப்ரெண்ட் நிஷாவோட அம்மா அவங்க அப்பா அவளுக்கு அழகா ஒரு பொம்மை வாங்கி கொடுத்து இருக்காங்க அம்மா பார்பி பொம்மை.. அது நம்ம கல்யாணத்துல நடக்குமே.. அந்த மாதிரி புடவை கட்டி தலைக்கு அழகாக பின்னி பூவெல்லாம் வச்சு செஞ்சிருக்காங்க அம்மா... அத நான் வச்சுக்க கூடாதா அம்மா.. "


" வெச்சுக்கலாம் நேகா இதுக்கு நேரம் காலம் இருக்கு இல்லையா திடீர்னு நம்ம மூணு ஆயிரத்துக்கு எங்க போறது.. மொத்தக் காசு சேர இன்னும் நிச்சயம் ரெண்டு மாசம் ஆகும்.. வா உனக்கு ஸ்ரீ ராமநவமி வருதுல்ல.. அதுக்கு உனக்கு நான் பச்சை கலர் ஆஞ்சநேயர் வாங்கி கொடுக்கிறேன்.. "


" அம்மா எனக்கு ஆஞ்சநேயரும் பிடிக்கும்மா. அதுக்குன்னு அனுமனும் பார்பியும் ஒன்னாயிடுமா... அன்னிக்கு அப்படி தான் ஐஸ்கிரீம் கேட்டேன் நீ உடனே போயிட்டு மாதுளம் பழத்தை வாங்கி கொடுக்கற... அது ரெண்டு டேஸ்ட்டுக்கும் சம்பந்தமே கிடையாது மாதுளம் பழம் ஜில்லுன்னு இருக்குமா சொல்லு.. "


 "பூரணி நீ நேகா கிட்ட எல்லாம் பேசாத இந்த காலத்து குழந்தைகளுக்கு எல்லாம் ரொம்ப ஐக்யூ ஜாஸ்தி.. அவங்க கிட்ட பேசி நம்ம ஜெயிக்க முடியாது... விடு அடுத்த மாசம் கட்ட வேண்டிய பீஸ் கொடுத்திருந்தேன் இல்ல அந்த காச எடுத்து குடு..."


" இத பாருங்க இப்படி எல்லாம் காம்ப்ரமைஸ் பண்ணாதீங்க அதுக்கு அப்புறம் அவளே நாளைக்கு கேட்க ஆரம்பிச்சிடுவா. இந்த காசுக்கு பதிலா அத குடுன்னு. இந்த மாதிரி எல்லாம் குழந்தைகளை பழக்காதிங்க... குழந்தைகளுக்கு வருத்தம் தெரியணும். நல்ல விஷயத்துக்கு காம்ப்ரமைஸ் பண்ணலாம்ங்க ஆனா பிடிவாதத்துக்கு எல்லாம் பண்ண கூடாது.. " தன் மனைவி சொல்வதிலும் நியாயம் இருப்பதாக பட்டது பாஸ்கருக்கு.

----


 மறுநாள் காலையில் பள்ளிக்கூடம் கிளம்பும் பொழுது நேகாவின் முகத்தில் கவலை தெரிந்தது. 


 "என்ன நேகா காலம் கார்த்தால இவ்வளவு வருத்தம்? என்ற அப்பாவை பார்த்தாள் நேகா.


" அப்பா நிலநடுக்கம்னா என்னப்பா? "


" நிலநடுக்கம்கறது பூமி பிளந்து கட்டடம் எல்லாம் இடிஞ்சு விழும்"


" அதுல நிறைய பேர் செத்து போயிடுவாங்களப்பா.. "


" ஆமா இதெல்லாம் நீ ஏன் கேக்குற இப்ப...? "


 "அப்பா நான் ஒன்னு சொன்னா கோபிசிப்பியா அப்பா.. "


" அதெல்லாம் ஒன்னும் கோவிச்சுக்க மாட்டேன் என்னன்னு சொல்லு.. "


" அப்பா எங்கேயோ நம்ம இந்தியாவுக்கு வெளியில ஒரு நாட்டுல பூகம்பம் வந்துருச்சாம்.. அங்கு வேலை செஞ்ச என் பிரண்டு சுதிரோட அப்பா இறந்து போயிட்டாராம்... அவங்க அம்மா நேத்திக்கு பள்ளிக்கூடம் வந்து பீஸ் கட்ட முடியல அப்படின்னு சொன்னாங்க அப்பா.. "


" அதுக்கு? இதை ஏன் என்கிட்ட சொல்ற? "


" அப்பா நான் பார்பி பொம்மையை வாங்கினால் என்ன செய்வேன்.. "


" உன்னோட செல்ப்ல வச்சு விளையாடுவ.. "


" அப்புறம் என்ன செய்வேன்.. "


" நேகா நீயே சொல்லு அப்பாவுக்கு ஆபீஸ் லேட் ஆச்சு.. " 


 சட்டென அப்பாவின் கையைப் பிடித்து தன்னுடைய குட்டி பீரோ இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றாள் நேகா. அங்கிருந்து உண்டியலை எடுத்து காசை கீழே கொட்டினாள்.


" அப்பா என்னோட முடிவு இதுதான் பா.. நான் பொம்மையை வைத்து அழகு பாக்குறதுக்கு பதிலா.. சுதிருக்கு இந்த மாசம் நான் ஃ பீஸ் கட்டறேன் பா ப்ளீஸ் பா... " என்ற நேகாவை அள்ளி உச்சி முகர்ந்தான் பாஸ்கர்.


 தலைமை ஆசிரியை நேகாவை பார்த்த பார்வையில் பெருமிதம் தெரிந்தது. 


" குழந்தையை நல்லா வளர்த்து இருக்கீங்க சார்.. " என்பதில் பாஸ்கருக்கு இன்னும் சந்தோஷம் ஏற்பட்டது.


 கையில் "அன்னை தெரசா முத்திரை பதித்த சான்றிதழ் உடன் உள்ளே நுழைந்த நேகாவால் அந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. அவள் கைகளில் பார்பி பொம்மையை கொடுத்த அப்பாவை பார்த்தாள் நேகா.


" அப்பா ஏதுப்பா இது... எதுக்கு சேமிப்பை வேஸ்ட் அடிக்கிறீங்க? " என்ற நேகாவை செல்லமாக தலையில் குட்டினான் பாஸ்கர்.


" அப்பாக்கு நீ சேமிக்க சொல்லித்தர ஆரம்பிச்சுட்டியா? இது வேற ஒன்னும் இல்ல உன் அத்தை அமெரிக்காவில் இருந்து உனக்கு பார்சல் அனுப்பி இருக்கா நீ ஸ்கூல் போனதும் அந்த பார்சல் வந்தது.. நான் அவகிட்ட உன் பிடிவாதத்தை பத்தி போன வாரம் பேசிட்டு இருந்தேனா... அத்தை வேற விதமா பாத்துருக்கா. இந்த வயசுல பார்பி பொம்மையை வெச்சுக்காம எப்படா வெச்சுக்கும் அப்படின்னு ஒரு லெட்டர் வேற அனுப்பி இருக்காங்க உன் அத்தை... எனக்கே இது ஆச்சரியம். நல்லதே நினைச்ச உனக்கு எப்படி கிப்ட் கொடுத்திருக்கிறார் பார் கடவுள்.. " என்ற அப்பாவை சென்று கட்டிக் கொண்டாள் நேகா.


 நேகாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம். தன்னுடைய குட்டி பீரோவில் கல்யாணப் பெண் பார்பியை வைத்து அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் அம்மா கொடுத்த பால் ஆறிக் கொண்டிருந்தது.


 குழந்தை என்றும் குழந்தை தான். சில சமயங்களில் பெரியவர்கள் அவர்கள்.