tamilnadu epaper

சோற்றுக்காக நடந்தோம்

சோற்றுக்காக நடந்தோம்

புதுக்கவிதை யெனும் பெயரில் நாளும் எவ்வளவோ நூல்கள் வருகின்றன, அவைகளில் பெரும்பான்மையான நூல்கள் அச்சடித்த மனம் மாறாமல் முகவரியிழந்து, வந்த சுவடு தெரியாமல் மூலையில் முடங்கிப் போய்விடுகின்றன. சில நூல்களே அவற்றின் கருத்தாக்கத்தாலும் சொல்லாக்கத்தாலும் நின்று மனம் பரப்பி நீடித்த புகழ்பெறுகின்றன. அவ்வரிசையில் பாவலர் இரமேசு அவர்களின் சோற்றுக்காக நடந்தோம் எனும் நூல் முதல் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க அளவில் அமைந்துள்ளது என்பதை கற்றுணர்ந்த சான்றோர் யாவரும் ஒப்புரைப்பார்.

நூலின் தலைப்பைப் பார்த்ததுமே நெஞ்சுப் பகீரெனப் பற்றிக் கொள்கிறது. கடுகைத் துளைத்து ஏழ் கடலையும் உள்ளடக்கிய குறளைப் போல், இந்த சோற்றுக்காக நடந்தோம் எனும் ஒற்றை வரித் தலைப்பிற்குள் நூலின் உள்ளடக்கம் முழுவதையும் உணர்த்திவிடுகிற மந்திர ஆற்றலைக் கொண்டுள்ளதால், நூலுக்குள் சென்றவுடனே படித்து இல்லை குடித்து விட வேண்டும் எனும் ஓர் அசாத்திய தாகமும், துடிப்பும் நெஞ்சுக்குள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. நிலவுடமைச் சமூகத்தின் ஆண்டான் அடிமைப் பேதத்தாலும், சாதிய ஒடுக்கு முறையின் அவலங்களாலும் கட்டமைக்கப்பட்டிருந்த அன்றைய சமூகத்தில், விளிம்பு நிலை சமூக ஏழை சிறுவனான இந்நூல் ஆசிரியர், துள்ளித் திரியும் பருவத்தின் களிப்பையும், கற்பனைக் கனவுகளையும் காவு கொடுத்து விட்டு, சமூகத்தின் எல்லோராலும் ஏளனத்தாலும் அவமானத்திற்குள்ளாகி, கொடிய வறுமையோடு போராடிய அந்த கடந்த கால நிகழ்வுகளை தன் நினைவலைகளில் கோர்த்து, ஒரு துன்பவியல் காவியமாக பாவலர் இரமேஷ் அவர்களால் படைக்கப்பட்டிருக்கும் இந்நூல், சொல்லோவியமாக ஒவ்வொரு சொல்லும், ஒரு சிற்பியின் கவனத்தோடு செதுக்கிய வடிக்கப்பட்டுள்ளதை கவித்துவம் படைத்த அறிஞர் எவரொருவரும் உச்சிமேல் வைத்துப் போற்றுவர்.

அன்றைய கிராம மக்களின் வாழ்நிலைப் பண்பாடு, பசுமைப்படர்ந்த வயல்வெளிகள், அங்கே பணிபுரியும் உழவர், உழத்தியர், கால்நடைகள், வளைந்து நெளிந்தோடும் நீரோடைகள், உணவுக்காக ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்குகள் என பல காட்சிகளையும் அழகியல் கண்ணோட்டத்தோடு படம்பிடித்து காட்டியிருக்கிம் திறத்தால் இந்நூல் ஒரு காப்பியத் தகுதியை பெற்றுவிடுகிறது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அக்கால கிராம மக்களின் பிணி தீர்க்கும் மருத்துவச்சியாகத் தன் அன்னையார் விளங்கியதையும், அவரின் மருத்துவ முறைகளை விளக்கியிருப்பதின் மூலம் மக்களுக்குப் பயனுரும் செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

இந்நூலைப் படிக்கின்ற போது சோற்றுக்காக நடந்த அக்கா தம்பியோடு, வயல்வெளிகளில் நாமும் நடக்கிறோம். இருள் சூழ்ந்த கிராம குடிசைக்குள் அவர்களோடும், அங்கே ஒண்டிக் கிடக்கும் நாய்களோடும் நாமும் ஒண்டிக் கொள்கிறோம். நிகழ் காலத்தை மறந்து, அரை நூற்றாண்டுக்கு முந்திய காலத்தில் நம்மையும் பயணிக்க வைத்து விடுகிறார் இந் நூலாசிரியர் திரு இரமேசு அவர்கள்.

நூல் முழுக்கச் சுவைத்ததும்பும் சொற்களால் புதுபாட்டால் வடிக்கப்பட்டுள்ளது. புது பாட்டாயினும் மரபை போல் எதுகையும் மோனையும் முத்தமிட்டுக் கொள்ளும் மோகனங்கள் நூல் நெடுகிலும் காண்கின்றோம். மொத்தத்தில் இலக்கியச் சுவையோடு, ஒரு வரலாற்று நூலைப் படித்த மனநிறைவை நமக்குள் ஏற்படுத்திவிடுகிறது. இது போன்றச் சிறப்புக்குரிய பல நூல்களை திரு இரமேசு அவர்கள் படைத்திட நலமுடன் வளமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்



அன்பன் 

பிச்சை பாண்டி