tamilnadu epaper

தலைவா

தலைவா

அரவிந்தன் ஒரு தொழிற்சங்கத் தலைவன்‌. தலைவா தலைவா என தொழிலாளர் பாசமழை பொழிவார்கள் ‌

 

மேஜை மீது குத்தி சக தொழிலாளர்களுக்காக பேசுவான். தொழிலாளிக்காக தொடர் உண்ணாவிரதமிருந்து மயக்கம் போட்டு விழுவான்.

 

ஒருமுறை போனஸ் தர மறுத்ததற்காக கண் முன்னே நிற்பது டேங்கர் லாரி என்பதை கூட கவனிக்காமல் சாலையில் படுத்து மறியல் செய்தான். 

 

உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடுவான்‌. கேட் மீட்டிங்கில் நிர்வாகத்தை சாடுவான். 

 

ஒருமுறை ஒரு தொழிலாளி அதிகாரியை போதையில் அடித்து விட, சிறையில் அடைக்கப்பட்ட அவனுக்காக வக்கீல் வைத்து அவனை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தவன் ‌ அரவிந்தன். 

 

மற்றொரு முறை ஒரு தொழிலாளியை உள்ளூர் எம்எல்ஏ உணர்ச்சி வேகத்தில் அடித்துவிட அரவிந்தன் தலைமையில் தொழிலாளர் படை சாலை மறியல் செய்து நகரப் போக்குவரத்தையே ஒரு மணி நேரம் ஸ்தம்பிக்கச் செய்தது. எம்எல்ஏ சும்மா இருப்பாரா அவர் குண்டர்களை ஏவிவிட, சாலை மறியலில் ஈடுபட்ட அரவிந்தன் உட்பட பல தொழிலாளர்கள் குண்டாந்தடியால் தாக்கப்பட்டனர். 

 

தொழிலாளர் பிரச்சனைக்காக ஒரு வாரம் சிறையில் கூட அரவிந்தன் இருந்திருக்கிறான்.

 

அரவிந்தன் இப்போது ஓய்வு பெற்றுவிட்டான். பழைய சக்தி போய்விட்டது. தொழிற்சங்க தொடர்புகளை குறைத்துக் கொண்டான்.

 

அவனை எவரும் கண்டு கொள்வதில்லை. சில பழைய நண்பர்கள் வீடு தேடி அவனிடம் ஆலோசனை பெற வருவர். அப்போது சற்று உற்சாகமடைவான் அவன். 

 

உடல் நலம் குன்றிய நிலையில் ஒருநாள் அரவிந்தன் மருத்துவமனை செல்ல பஸ்ஸிற்காக காத்திருந்தான். பஸ் வரவில்லை. 

 

ஆட்டோ ஒன்று காலியாக அவனை கடந்து சென்றது. கைதட்டி நிறுத்தினான். 

 

"ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு?"

 

"நூறு ரூபாய்"

 

"வேண்டாம் பஸ்ஸிலே போய்விடுகிறேன்"

 

"எவ்வளவுதான் தருவீர்கள்?"

 

"எண்பது ரூபாய்"

 

சரி ஏறுங்கள் என்றான் ஆட்டோ டிரைவர்.

 

ஆஸ்பத்திரியை அடைந்ததும் ஆட்டோ டிரைவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு நன்றி என்றான் அரவிந்தன்.

 

ஆட்டோ டிரைவர், " பார்த்துப் போ தலைவா !" என்றான் மகிழ்ச்சியோடு.

 

எத்தனையோ முறை தலைவா என்று பலரால் அழைக்கப்பட்டாலும் இப்போது அந்த ஆட்டோ டிரைவர் 'தலைவா' என்று அழைத்ததில் அவன் மனதிற்கு ஒரு திருப்தி. 

 

 

க.ரவீந்திரன்,

ஈரோடு - 638002.