தேநீர்எப்படியிருக்கிறது
எனக்கேட்டவளிடம்
காதலியின் ஈரம் காயாத முத்தத்தைப் போலவும்,
தாயின் தலைகோதுகிற
வாஞ்சை போலவுமாய்
நன்றாக இருக்கிறது என்றவனாய்
கடிகாரத்தை ஏறிடுகிறேன்.
வட்டவடிவத்தினுள் முட்களின்
துணைகொண்டு காலத்தை கணக்கிட்டு துல்லியம் சொல்லுகிறதுதான்.
படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை
அதனிடத்தில் வைத்து விட்டு சொல் கழண்டு ஒட்டிக்கொண்ட
மொத்தப்புத்தகத்தின் பக்கங்களையும்
சிறிதாய் அசைபோட்டவனாய்
எழுந்து அதிகாலையின் சுகந்தத்தில்
வாசலில் நிற்க
வைத்த புள்ளிகள் சுற்றி பிசகாது கோலமிட்டுக்
கொண்டிருந்த மனைவி
என்னை ஏறிட்டு
இன்னுமொரு தேநீர் தருகிறேன் வாருங்கள்.
தங்களின் காதலியும்,தாயும் நான்தான்
என்றவளாய் ஏறிடுகிறாள் என்னை!
-விமலன்.