காலை ஐந்து மணிக்கு நடைப்பயிற்சிப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது தெருவின் முனையிலிருந்த காம்பளக்சின் பூட்டப்பட்ட கடையின் முன் கண்ட காட்சி வியப்பில் கண்களை விரிய வைத்தது.
அது சற்றே இளமையான பசுமாடு. பக்கத்தில் நெற்றியில் நாமத்துடன் தன்னை அலங்கரித்துக்கொண்ட பூம்பூம் மாட்டுக்காரன். பக்கத்தில் அவன் அந்தப் பசுமாட்டின் முதுகின் மேல் வண்ணங்கள் சதுரக் கட்டங்களில் மின்ன அதைப் போர்த்தி அலங்காரத்தைத் தொடங்கியிருந்தான்.
ராகவனுக்கு நினைவுகள் பின்னோக்கி இளமைப் பருவத்திற்குச் சென்று விட்டது. அப்போதெல்லாம் தெருவில் காலை வேளைகளில் பூம்பூம் மாட்டுக்கார்கள் வருவார்கள். கையில் சிறு மேளம் இருக்கும். கை மேளம் அது. கையில் உள்ள வளைந்த சிறு மூங்கில் குச்சியால் தேய்த்துக்கொண்டே ஒலித்துக்கொண்டே குறி சொல்லி வருவார்கள். நீண்ட காலம் ஆகிவிட்டது பழைய விஷயங்கள் பல தொலைந்துபோய்விட்டன. கால மாற்றத்தில்.
குளித்துவிட்டு வாசலுக்கு வந்தபோது அவன் தெருவிற்குள் மாட்டை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகக் குறிசொன்னபடி கையேந்திக் கொண்டிருந்தான். கூடவே ஒல்லியாக அவனுடைய பையன் சிறு தட்டுடன்.
ராகவனுக்குள் பழைய நினைவுகள் கிளர்ந்திருக்க.. அந்த பூம்பூம் மாட்டுக்காரன் இவன் வீட்டின் அருகே வரும்போது அப்படியே நில்லுப்பா மாட்டோடு சேர்த்து நீயும் உன் பிள்ளையும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் என்றான்.
அவன் நின்றபடி தன்னுடைய பையனை மட்டும் விலகிப்போகச் சொன்னான்.
ஏம்பா அவனையும் மாட்டோடு சேர்ந்து நிக்கச்சொல்லு.. என்றான் ராகவன்.
வேண்டாம்.. இந்த மாடுதான் கடைசிமாடு. என்னோட இந்த பொழப்பு போகட்டும். இந்த மாட்டுக்குத் தீனிபோடத்தான் தெருவுக்கு வந்திருக்கேன்.. என்னோட பையன் படிக்கிறான்.. இன்னிக்கு லீவு நாளு நானும் வரேன்னு அடம்புடிச்சான் அழச்சிட்டு வந்தேன்.. படிக்கிற புள்ளக்கி இந்தப் பொழப்பு வேண்டாம் சாமி என்றான். அந்தப் பையனை ராகவனே தள்ளிப் போகச் சொல்லிவிட்டுப் புகைப்படம் எடுத்துவிட்டு அவன் கையில் ஐம்பது ரூபாய் நோட்டைத் தந்தான்.
நல்லது சாமி.. என்றபடி போனான் அந்த பூம்பூம் மாட்டுக்காரன்.