கோவை, ஏப். 27–
‘பெண்களுக்கு எதிரான, 90 சதவீத குற்றங்கள் வெளிவருவதில்லை,’’ என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பேசினார்.
கோவை மாவட்ட பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி பேசியதாவது:
பழங்காலத்தில் பெண்களின் சமுதாய பங்களிப்பு பெரியளவில் இருந்தது. ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு வடமொழி காப்பியங்களில், பெண்கள் துன்பப்பட்டு உள்ளனர். எந்த காவியமானாலும், பெண்களை மையப்படுத்தியதாக உள்ளது.
தமிழகத்தில், கண்ணகி தான் நீதி கேட்ட முதல் பெண். நீதி கிடைக்கவில்லை என்பதற்காக, அவர் ஒரு மாநகரையே எரித்தவர். கண்ணகி மட்டுமல்ல, மாதவியும் கற்புக்கரசியே. இந்த மண்ணில் பிறந்த பெண்கள் அனைவரும் நல்லவர்களே.பெண்களின் முன்னேற்றமே, நம் வாழ்வின் முன்னேற்றம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 10 சதவீதம் மட்டுமே வெளியே தெரிகின்றன. மீதமுள்ள, 90 சதவீத குற்றங்கள் வெளிவருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.