நான் எங்கள் கிராமத்தில் சிறுவனாக இருந்தபோது அவ்வப்போது கிராமத்தில் உள்ள பெண்கள் பேய் வந்துவிட்டது என்று பேயாட்டம் ஆடுவார்கள். அந்தப் பேயை விரட்ட ஒரு பூசாரியும் இருப்பார். ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்தது தெரிய வந்ததும் உடனே குடும்பத்தினர் பேய் ஓட்டுபவரை வரவழைப்பார்கள். பேய் ஓட்டுபவர் உடுக்கையுடன் வந்து பாட்டு பாடிக்கொண்டே பேயாட்டம் போடும் பெண்ணை பிரம்பால் அடித்து உன்னை பிடித்தது யார் என்று கேட்பார். அதற்கு அந்தப் பெண் இறந்துவிட்ட ஒருவரின் பெயரை அதுவும் மது அருந்தும் பழக்கம் உள்ளவராக இருந்தவரின் பெயரை சொல்லும். ஆக்ரோஷமாக பேயாட்டம் போடும் பெண்ணைப் பார்க்க அந்த வீட்டுக்கு வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு வந்து விடுவார்கள். .அன்றைய பேயாட்டம் முடிந்ததும் இரவில் நான் தூங்கும்போது அதை நினைத்து பயந்து பாதி நேரத்தில் என்னை அறியாமல் கத்திவிடுவேன். இருப்பினும் அடுத்த நாளும் தொடர்ந்து பேயாட்டம் பார்க்கச் சென்று விடுவேன் அடுத்த நாள் பூசாரி அந்தப் பெண்ணைப் பார்த்து என்ன வேண்டும் உனக்கு என்று கேட்பார். அதற்கு அந்தப் பெண் சாராயமும் கோழிக்கறியும் வேண்டும் என்பார். சரி .அதை கொடுத்தால் போய்விடுவாயா என்பார் பேய் ஓட்டுபவர். போறேன் போறேன் என்று சொல்வார் பேய் ஆட்டம் போடும் அந்தப் பெண். சரி நாளைக்கு வாங்கித் தருகிறேன் சாப்பிட்டுவிட்டு கட்டாயம் போய் விட வேண்டும் என்பார் பேய் ஓட்டுபவர். அடுத்த நாள் அந்த பேயாட்டம் ஆடும் பெண் கேட்டபடியே சாராயமும் சமைத்த கோழிக்கறியும் எடுத்து வந்து அந்தப் பெண்ணிடம் தருவார். உடனே அந்தப் பெண் சாராயம் ஒரு பாட்டிலையும் காலி செய்து விட்டு கோழிக்கறியையும் ஒரு பிடி பிடிக்கும். பார்ப்பதற்கு கோரமாக இருக்கும். சாப்பிட்டு முடித்த பிறகு அந்தப் பெண்ணைப் பார்த்து பேய் ஓட்டுநர் கேட்பார். நீ கேட்டதை வாங்கி கொடுத்துச் சாப்பிட்டு விட்டாயே இப்போது போகிறாயா என்பார். உடனே அந்தப் பெண் போறேன் போறேன் என்று மிகவும் ருத்ர தாண்டவத்துடன் தலை முடியை பிரித்துப் போட்டுக் கொண்டு அசைத்து அசைத்து ஆடிவிட்டு நான் போறேன் என்று கத்திவிட்டு அப்படியே மயக்கமுற்ற மாதிரி கீழே விழுவார். உடனே பேய் ஓட்டுபவர் அந்தப் பெண்ணின் தலை முடியை சிறிது வெட்டி எடுத்து அதை ஆணியில் சுற்றி எடுத்துக்கொண்டு சுடுகாடு உள்ள இடத்தில் இருக்கும் ஒரு மரத்தில் இந்த ஆணியை அடித்து விடுவார் அத்துடன் அந்தப் பெண்ணை விட்டுப் பேய் போய்விட்டதாகப் பொருளாம். இது வெறும் ஏமாற்று செயல் என்பது பின்னாளில் எனக்குத் தெரிய வந்தது. அதாவது இந்தப் பெண்ணுக்குச் சாராயமும், கோழிக்கறியும் சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தை பேயாடுவதின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்கான தந்திரம். சாராயம், கோழிக்கறி வேண்டுமென்று அந்தப் பெண்ணுக்கு ஆசை ஏற்படும்போது அவர் கணவரிடம் கேட்டால் வாங்கித் தர மாட்டார் உதைதான் விழும் என்பதைத் தெரிந்து கொண்டு இப்படி நடிப்பது கிராமிய பெண்களின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இறைச்சி வாங்க வேண்டும் என்றால் எங்கள் கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் சென்று வாங்கி வர வேண்டும். அவ்வளவு தூரம் சென்று கணவர் வாங்கி வந்து கொடுக்க மாட்டார் என்பது அந்தப் பெண்ணுக்கு தெரியாதா என்ன? அதனால் பேய் வந்தது போல் நடித்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வார். இரண்டு வாரம் சென்ற பின் இன்னொரு பெண்ணுக்குப் பேய் பிடிக்கும். இப்படியாக இருந்தது அந்தக் காலத்தில் கிராமியப் பெண்களின் வழக்கம். அதை இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது. ஆண்களுக்குப் பேய் பிடிக்காது பெண்களுக்குத் தான் பேய் பிடிக்குமாம். என்ன வினோதம்? தற்போதெல்லாம் எங்கள் கிராமத்தில் மட்டுமல்ல சுற்றுப்புற கிராமத்தில் உள்ள எந்த பெண்களுக்குமே பேய் பிடிப்பதில்லை பேய் ஓட்டுபவரும் இல்லை.
அன்புடன்
உ.மு.ந. ராசன் கலாமணி
4, சுபி இல்லம் கிழக்குப் பூங்கா தெரு கோபிசெட்டிபாளையம் 638452.