எம். எம். தீன்
நெல் வெளியீடு
திருநெல்வேலி
தொடர்புக்கு 8610380258
விலை ரூ 75.
பக்கங்கள் 88.
நூல் திறனாய்வு: தாணப்பன் கதிர்
யாசகம், சந்தனத்தம்மை, கல்லறை, நீர்ப்பரணி, கோதைப்பூ போன்ற நாவல்களைத் தந்தவரிடமிருந்து வந்திருக்கும் குறு நாவல் மக்கத்தப்பா.
"லே, கிறுக்கா, என்ன பண்ற அந்த கோலக்காட்டுக்கு போயி நைஸ் பாய் தூக்கி வையில" ...என்பதில் அறிமுகமாகிறார் அத்துல என்னும் அப்துல். அவர் யார்? அவரது உண்மையான பெயர் என்ன? ஏன் இந்த ஊருக்கு வந்தார்? அவரது குணநலன்கள் எப்படி? என்று ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து மக்கத்தப்பாவாக மாறுவது வரை நம்மை அத்துலப்பாவோடு பயணிக்க வைக்கிறார்.
ஊருக்கே எந்த பிரதிபலனும் ஏன் பணம் கூலிக்கு கூட ஆசைப்படாத ஒரு மனிதன். அவனது எண்ணம் முழுவதும் மெக்காவுக்கு போகணும் என்பதே.
எப்போதும் யார் கேட்டாலும் இதையே சொல்லும் அப்துல். அவர் எண்ணத்தை அல்லா எவ்வாறு நிறைவேற்றி வைக்கிறார். அத்துலத்தா எவ்வாறு வக்கத்தப்பாவானார் என்பதை பதினோரு சின்ன அத்தியாயங்களில் நமக்கு சொல்லி விடுகிறார் நூலாசிரியர் தீன்.
ஊரென்றால் இருக்கும் பலதரப்பட்ட மனிதர்கள், அவர்களின் குணம் இவற்றைக் காண்பித்து அவர்களிடம். அத்துலு எவ்வாறு இருக்கிறார் என்பதை நம் கண்முன்னே காட்சிமைப்படுத்தி அத்துலோடு அத்துலாக பயணிக்க வைப்பதில் வென்றிருக்கிறார் தீன்.
ஊரே மெச்சும் அத்துல் போன்றோர் நம்முடன்தான் இருக்கிறார்கள். நாம் நம்மையும் தொலைத்து அத்துலையும் தொலைத்து வேறெதையோ வாழ்வென்று வாழ்ந்து காலத்தை தொலைத்து நிற்கிறோம்.
அத்துலுக்கு கிடைத்த தங்கை மருமகன்கள் அவர்கள் மீது அத்துல் பொழியும் அன்பு கண்களைக் குளமாக்குகிறது.
அத்துலின் விருப்பம் நிச்சயமாக நிறைவேறும் என்பதைக் கணிக்க இயலும் என்றாலும் அதை நேர்த்தியாக பாயை முடைவது போல் பாவித் தந்திருப்பதில் நெஞ்சை அள்ளுக்கிறார் தீன்.
பறவைகள் ஒலிகளைக் காட்சிமைப்படுத்துதலில் சந்தனத்தம்மை நிழலாடுகிறது. அழகான ஹவுலு மீனு ஈர்க்கிறது.
ஷ்ரோடிங்கரின் பூனையைப் போலல்லாமல் நிஜமாகவே பூனை ஒன்று கதாபாத்திரமாக இங்கே வருகிறது. அத்துலுக்கும் பூனைக்குமான உரையாடல் வசீகரம்.
"பல நேரங்களில் ஊரைவிட்டு போய்விடலாம் என்று என்ன வரும் அப்போதெல்லாம் யாரும் ஆதரவற்ற தங்கை என ஆயிஷா மாதம் வந்து முன்னில் அப்படி ஒரு உறவு போதும் என்று இருக்கும்". இப்படி ஒரு தங்கை உறவு அத்துலைப் போல அனைவருக்கும் அமைந்தால் எந்த கவலையும் நம்மை அண்டாது. நாம் மீண்டெழுந்து உலாவ உதவும். நேர்த்தியான கதாபாத்திர செதுக்கல் இது.
முழுமை அல்லது பூரணம் என்றால் என்ன? அதன் பின்னால் ஏற்படும் நிகழ்வுகள் என்னென்ன? அதற்கான முடிவுதான் என்ன என்ற கேள்விக்கான விடையை மக்கத்தப்பா தந்திருக்கிறார். இதையே அணிந்துரையாக தந்திருக்கிறார் ராஜா சிவக்குமார்.
கவிஞர் விக்ரமாதித்தியன் சொன்னது போல பூரணத்துக்கான விடையைத் தேட வேண்டாம். அமைதியாக இருந்தால் போதும். பதில் ஒருநாள் தானாகவே மடியில் வந்து அமரும் என்பதை உணர இயலும்.
அதேபோல் கவிஞர் தேவதச்சன் அடிக்கடி கூறும் உணர்வே இறைவன் ( Sensation is God) என்பதையும் உணரலாம்.
அறிவியல் பார்வை முன்னின்று மதம் குறித்தான ஏற்பை விலக்கி விட்டது என்று எம். எம். தீன் தன்னுரையில் தெரிவித்திருப்பதை அவரோடு பழகிய அனைவருமே அறிந்திருப்பர் என்பதில் ஐயமில்லை.
'ஒளி தந்த கதை' என்று தீன் சொல்லி இருப்பதை நாமும் உணர்ந்து அந்த ஒளியை நம்முள்ளும் ஏற்றி வைக்க இயலும்.
ஒளியே இறை என்ற வள்ளலாரின் கூற்றை மக்கத்தப்பாவின் மூலம் உணரலாம்.