ஆறடி உயரத்தில் தன் முன் வந்து நின்ற நோயாளியை அண்ணாந்து பார்த்தார் மனநல மருத்துவர் மைத்ரேயன்.
நோயாளியை அமரச் செய்த டாக்டர், அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
"உங்கள் பெயர்?" என்றார்.
"விக்னேஷ்." என்றான் அவன்.
"உங்களுக்கு என்ன வியாதின்னு தெரிஞ்சுக்கலாமா?"
பலமாக சிரித்தவன்,"டாக்டர்! என்னைப் பார்த்தா நோயாளி மாதிரியா இருக்கு?" என்றான்.
சற்றே குழம்பிய டாக்டர்," அப்புறம் எதுக்கு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?" என்றார் எரிச்சலுடன்.
"டாக்டர்! நான் சொல்றதைப் பொறுமையா கேளுங்க..."
அமைதி காத்தார் டாக்டர்.
"எனக்கு எந்த வியாதியும் இல்லை. என்னோட நண்பர்களும் உறவினர்களும் தான் எனக்கு வியாதி இருக்கிறதா சொல்றாங்க டாக்டர்" என்றான் மெல்லிய குரலில்.
"என்ன வியாதி இருக்கிறதா சொல்றாங்க மிஸ்டர் விக்னேஷ்?"
"எனக்கு நானே தனியா பேசிக்கிறேனாம்."
சட்டென அதிர்ந்தார் டாக்டர்.
"என்ன சொல்றீங்க?"
"ஆமாம் டாக்டர். நான் தெளிவா தான் இருக்கேன். அவங்க தான் எனக்கு தனியா பேசுற வியாதி இருக்குன்னு சொல்றாங்க"- என்றான் கவலையுடன்.
அவனைப் பார்க்க பாவமாக இருந்தது அவருக்கு.
"கவலையேப் படாதீங்க.என்கிட்ட வந்துட்டீங்கல்ல... இந்தியாவிலேயே சிறந்த மனநல மருத்துவர் இந்த மைத்ரேயன் தான்..."
மனநல மருத்துவர் மைத்ரேயன், நிலைக்கண்ணாடி முன்பு நின்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு திகைத்து நின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.
*- ரிஷிவந்தியா,*
*தஞ்சாவூர்.*