tamilnadu epaper

மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

மாலே:

‘’இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுடன் முந்தைய மாலத்தீவு அரசு மேற்கொண்ட ஒப்பந்தங்கள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை,’’ என, அந்த நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். இதையடுத்து, ‘இந்தியாவுடனான நல்லுறவை சீர்குலைத்ததற்கு முகமது முய்சு, அந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


தெற்காசிய நாடான மாலத்தீவில், மக்கள் தேசிய காங்கிரசைச் சேர்ந்த முகமது முய்சு அதிபராக உள்ளார். கடந்த 2023ல் இங்கு நடந்த அதிபர் தேர்தலின் போது முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். அப்போது பல வாக்குறுதிகளையும் அளித்தார்.



முய்சுவும், அவரது கட்சி நிர்வாகிகளும், ‘மாலத்தீவில் ஆட்சி செய்தவர்கள், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை செய்துள்ளனர்; இது, மிகவும் கவலை அளிக்கிறது’ என்றனர்.



இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு முகமது முய்சு நேற்று ௧௫ மணி நேரம் பேட்டியளித்தார்.


 கோவில் பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி புள்ளி!

அப்போது அவர் கூறுகையில், ‘’மாலத்தீவின் முந்தைய அரசுகள், பிற நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை,’’ என்றார்.

முகமது முய்சுவின் இந்த பேட்டியை, முன்னாள் வெளியுறவு அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான அப்துல்லா ஷாஹித் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:


அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, முகமது மொய்சு தவறான வாக்குறுதிகளை அளித்தார். இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் மாலத்தீவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறினார்.



இந்திய ராணுவ வீரர்களை மாலத்தீவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவரது தவறான பிரசாரம் மாலத்தீவின் நற்பெயரை கெடுத்து, இந்தியாவுடனான உறவை சீர்குலைத்தது. தற்போது அதிபர் தன் நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். பொதுமக்களை தவறாக வழிநடத்தி இந்தியாவுக்கு எதிராக துாண்டிய முகமது முய்சு, இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.